நடிகர், பத்திரிகையாளர், வழக்கறிஞர், அரசியல் விமர்சகர் என பன்முகம் கொண்ட சோ.ராமசாமி இன்று சென்னையில் காலமானார். அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் பிரமுகர்களும், திரையுலக பிரமுகர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நடிகர் சங்க தலைவர் நாசர், நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி, விஷால், நடிகர் சங்க உறுப்பினர்கள் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் நடிகர் சங்கம் சார்பில் இரங்கல் அறிக்கையையும் வெளியிட்டிருக்கின்றனர்.
அதில், ‘சோ’ இந்த ஒற்றை வார்த்தைக்குப்பின் அடுக்கடுக்காய் பல படிமங்கள் தொகுத்து நிற்கின்றன. வழக்கறிஞராய், நாடகவியலாளராய், திரைப்பட நடிகராய், விமர்சகராய், பத்திரிகையாளராய் என நீண்டு கொண்டே போகின்றன. ஆனால் ஒவ்வொரு படிமமும் இதுவரை யாரும் பதித்திராத வகையில் தனக்கென தனியொரு பாணி வகுத்தவர்.
மனதுக்கு பிடித்தோரை கண்முடித்தனமாய் பின்பற்றும் இன்றைய அரசியல் சூழலில், தான் ஆதரித்தோரை தவறு செய்யும் போது கடுமையாக விமர்சித்தும், விமர்சிக்கப்பட்டவர் சரியானதொரு காரியம் செய்யும்போது பெருமனதோடு ஆதரிப்பதும், பத்திரிகையாளராய் அவருடைய முதிர்ச்சி பாராட்டுக்குரியது, பின்பற்றக்கூடியது.
அன்னாரை இழந்துவாடும், உற்றத்தார், சுற்றத்தார், நாடகம், திரைப்படம் சார்ந்தோர், பத்திரிகையாளர் அனைவரோடு தென்னிந்திய நடிகர் சங்கம் அவரை பிரிந்த துக்கத்தில் பங்கு கொள்கிறது. அவர் ஆன்மா சாந்தியடைவதாக.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.