கார்த்திகை தீப விழா: திருவண்ணாமலையில் நாளை தேரோட்டம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. தீப விழாவின் 6-ம் நாளான இன்று காலை மூஷிக வாகனத்தில் விநாயகரும், வெள்ளி யானை வாகனத்தில் சந்திர சேகரரும் வீதி உலா வந்தனர். 63 நாயன்மார்களும் உடன் ஊர்வலம் வந்தனர். சிவனை வழிபடுவது சைவ வழிபாடு ஆகும்.

சிவனின் புகழ்பாடும் பன்னிரு திருமுறைகளில் முக்கிய நூல் பெரிய புராணம். சிவ பக்தர்களின் பெருமையை கூறுவதால், இந்த நூலை பெரிய புராணம் என்பர். நாயன்மார்களில் சமயக் குரவர்கள் (தலைவர்) என்று அழைக்கப்படுபவர்கள் திருநாவுக்கரசர், சுந்தரர், திருஞானசம்பந்தர், மாணிக்க வாசகர் ஆவர்.

எனவே, 63 நாயன்மார்கள் உற்சவ மூர்த்தியாக தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி மாட வீதிகளில் உலா வந்தனர்.

அருணாசலேஸ்வரர் கோவில் 16 கால் மண்டபம் எதிரில் இருந்து புறப்பட்டு தேரடி தெரு, திருவூடல் தெரு, பே கோபுர தெரு, பெரிய தெரு உள்ளிட்ட மாட வீதிகளில் வந்த சாமி வீதிஉலா, மீண்டும் அருணா சலேஸ்வரர் கோவில் எதிரில் நிறைவடைந்தது.

இதைத் தொடர்ந்து சின்னக்கடை தெருவில் உள்ள 63 நாயன்மார் மடத்தில் மண்டகப்படி நடந்தது. சிவத் தொண்டர்களாக வீதிஉலா வந்த நாயன்மார்களை மாட வீதிகளில் வழிநெடுகிலும் திரண்டிருந்த பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

இரவு அபிதகுஜாம்பாள் சமேத அருணாசலேஸ்வரர் வெள்ளி ரதத்திலும், மற்ற மூர்த்திகள் இந்திர விமானம், இதர வெள்ளி விமானங்களில் எழுந்தருளி வீதிஉலா வருகிறார்கள். நாட்டுக் கோட்டை நகரத்தார் திருப்பணியில் செய்யப்பட்ட இந்த வெள்ளி தேர் உற்சவம் மிகவும் விசே‌ஷமானது.

தீப விழாவின் 7-ம் நாள் உற்சவமான நாளை (வெள்ளிக் கிழமை) தேரோட்டம் நடக்கிறது. இந்த விழாவில் ஒரே நாளில் 5 தேர்கள் மாட வீதிகளில் வலம் வரும். பல ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம்பிடித்து தேர்களை இழுப்பார்கள்.

தீப திருவிழாவில் வரும் 12-ந் தேதி காலை பரணி தீபமும், அன்றிரவு மகா தீபமும் ஏற்றப்படுகிறது. இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப் பட்டுள்ளது. வேலூரில் இருந்து 500 போலீசார் திருவண்ணாமலைக்கு இன்று காலை புறப்பட்டு சென்றனர்.

வேலூர் நில அபகரிப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு உஷ்மான் அலிகான், காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி தரன் ஆகியோர் தலைமையில் 9 இன்ஸ்பெக்டர்கள், 30 சப்-இன்ஸ்பெக்டர்கள், வெடிகுண்டு நிபுணர்கள் அடங்கிய போலீஸ் படை திருவண்ணாமலைக்கு விரைந்துள்ளனர்.

வேலூர் போலீசார் இன்று முதல் பாதுகாப்பு பணியை மேற்கொள்கின்றனர். இதே போல் மற்ற மாவட்டங்களில் இருந்தும் போலீசார், திருவண்ணாமலை தீப திருவிழா பாதுகாப்பு பணிக்காக வருகிறார்கள்.

தீப விழா தரிசனத்திற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என்பதால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் அசாம்பாவிதம் ஏற்படாமல் இருக்க தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.