இருதய நோயாளிகளே வெயில் காலத்தில் ஜாக்கிரதையாக இருங்க
நீங்கள் இருதய நோயாளியா? 50 வயதுக்கு மேற்பட்டவரா?
இந்த வெயிலுக்கு சில பாதுகாப்புகள் உங்களுக்கு அவசியம் தேவை. பொதுவில் 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அவர்களுக்கு தாகம் என்ற உணர்வு அதிகம் தெரியாது. எனவே வெளியில் செல்வதற்கு முன் கொஞ்சம் தண்ணீர் குடித்து செல்லுங்கள். உங்களுக்கு தாகம் இல்லாவிட்டால் கூட சிறிது தண்ணீர் குடித்து செல்லுங்கள்.
* முடிந்தவரை பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்வதைத் தவிர்ப்பது நல்லது. இந்நேரத்தில் உஷ்ணம் கூடுதலாக இருக்கும்.
* அதிக வியர்வை எப்பொழுதும் ஷூ போட்ட கால்களில் இருக்கும். ஆக நல்ல காற்றோட்டமுடைய ஷூ அணியுங்கள். தினமும் சாக்ஸசை மாற்றுங்கள் பாதத்திற்கு நல்ல டால்கம் பவுடர் உபயோகியுங்கள்.
* அதிக எடையில்லாத வெளிர் நிற, பருத்தி ஆடைகளை மட்டுமே பயன்படுத்துங்கள். தலைக்கு ஒரு தொப்பி, தரமான கருப்பு கண்ணாடி இவற்றினை அவசியம் பயன் படுத்துங்கள்.
* சன் ஸ்கீரீன் க்ரீம் பயன்படுத்துங்கள்.
* தண்ணீர் குடியுங்கள்.
* அதிக வெப்பம் இருக்கும் பொழுது காபி, மது இவை இரண்டினையும் அவசியம் தவிர்க்க வேண்டும்.
* அடிக்கடி நிழலான, குளுமையான இடத்தில் இருங்கள்.
உங்களை உஷ்ணம் அதிகம் தாக்குகின்றது என்பதன் அறிகுறிகள்:
* தலைவலி
* குளிர்ந்த ஈர சருமம்
* தலை சுற்றல்
* அதிக சோர்வு
* பலமின்மை
* வயிற்று பிரட்டல், வாந்தி
* அடர்ந்த சிறுநீர்
இந்த அறிகுறிகள் இருந்தால் குளுமையான இடத்திற்கு மாறுங்கள். ஈரத்துணியினை உடலின் மேல் படும்படி வையுங்கள். சோர்வு அதிகமாக இருந்தால் உடனடி மருத்துவரிடம் செல்லுங்கள்.
ஹீட் ஸ்டிரோக் எனப்படும் வெயில் தாக்குதலுக்கான அறிகுறிகள்
* ஜுரம் (அதிக ஜுரம்)
* குழம்பிய நடவடிக்கை
* வறண்ட, சிவந்த, சூடான சருமம்
* படபடப்பு
* வலிப்பு
* நினைவின்மை
இத்தகு அறிகுறிகள் இருந்தால் அவருக்கு உடனடி மருத்துவ சிகிச்சை தேவை.
ரொம்ப அதிக சூடோ அதிக குளிரோ இரண்டும் உடலுக்கு ஆகாத ஒன்றே. இருதய நோய் ஏற்கனவே உள்ளவர்களுக்கு வறண்ட, கொதிக்கும் உஷ்ணம் அபாயகரமான தாகலாம். அதிக வெப்பம் இருக்கும் பொழுது உடலில் உள்ள புரதம் அதன் ரசாயனமற்ற செயல்கள் இவை வேலை செய்யாது.
உடலில் உள்ள உஷ்ணம் இரண்டு வகையில் வெளியேறும். உங்கள் உடல் உஷ்ணம் சுற்றுபுற சூழ்நிலையினை விட அதிகமாக இருந்தால் உடலிலிருந்து வெளிக்காற்றுக்கு வெப்பம் வெளியேறும். இது இருதயத்தினை சற்று வேகமாகவும், கடினமாகவும் வேலை செய்ய வைக்கும்.
குளுமையான நாட்களை விட சூடான நாட்களில் ரத்த ஓட்டம் கூடுதலாக இருக்கும். வெப்ப நாட்களில் வெளி வரும் வியர்வை உடலின் உஷ்ணத்தினை குறைக்கும். இதுவே மிக அதிக வெயில் உஷ்ணம் இருக்கும் பொழுது இருதயத்திற்கு மிக அதிக உழைப்பினை கொடுத்து விடும்.
வியர்வை உடல் சூட்டினை வெளியிடும்பொழுது கூடவே சோடியம், பொட்டாசியம் மற்றும் பல தாது உப்புகளை வெளியிழுத்து விடும். இவை தசை இயக்கத்திற்கு தேவையானவை ஆகும். இவற்றினை உடலின் ஹார்மோன்கள் ஈடுசெய்கின்றன. ஆரோக்கியமான மக்கள் உடலின் இத்தகு மாற்றங்களை சீர் செய்து விடும்.
இருதய பாதிப்புடையோரும், வயதானவர்களும் இந்த உடல் அதிர்வுகளை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. வெப்பபக்க வாதம் என்ற பாதிப்பு எளிதாக ஏற்பட்டு விடுகிறது.
* பாதிக்கப்பட்ட இதயத்தினால் தேவையான ரத்தத்தினை பம்ப் செய்ய முடியாது.
* கொழுப்பினால் அடைபட்ட ரத்த குழாய்களினால் ரத்தத்தினை சருமத்திற்கு கொண்டு செல்ல முடிவதில்லை.
* சில இருதய மருந்துகள் இருதய துடிப்பினை நிதானமாக இயங்கச் செய்யும். இதனால் சற்று வேகமாக இயங்கி வெப்பத்தினை வெளியேற்ற முடியாது. சில மருந்துகள் அதிக சிறுநீர் போக்கினை ஏற்படுத்துவதால் உடல் மேலும் வறட்சியாகும். இவ்வாறு வேறு சில மருந்துகளாலும் பாதிப்பு ஏற்படுகிறது.
* பக்கவாதம், நடுக்குவாதம், மறதி நோய், நீரிழிவு நோய் போன்ற சில நோய் பாதிப்புகளால் உடலில் நீர்வற்றுவதனை மூளையினால் அறிகுறி ஏற்படுத்துவதில் குறைவு ஏற்படுகின்றது. ஆகவே தாகம் என்பதனை உடலுக்கு குறைவான அளவினையே மூளை உணர்த்துவதால் உடலுக்கு அதிக பாதிப்பினை ஏற்படுத்துகின்றது.
* தாது உப்புகள் இழப்பால் மயக்கம், விழுந்து விடுதல், ரத்தக் கொதிப்பு பாதிப்பு ஆகியவை ஏற்படுகின்றது. இதனை எப்படி தவிர்ப்பது?
* காலை அல்லது மாலை உஷ்ணம் தணிந்த வேளைகளில் உடற்பயிற்சி செய்யுங்கள்.
* குளிர்ந்த காற்று, குளிர்ந்த இடம், சூடற்ற குளியல் இவை வெகுவாய் உதவும்.
* சிறிய உணவு, கூடுதல் திரவ உணவு, பழங்கள், காய்கறி சாலட் இவை சிறந்த உணவாகின்றது.
இருதய நோய் பாதிப்பினை தவிர்க்கும் உணவுகள் :
* மூக்கடலை, சோயா, பூண்டு, வெந்தயம், நெல்லிக்காய் போன்ற உணவுகளை சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. பொதுவில் ஒருவித படபடப்பு, மயக்கம் என இந்த கோடை பாதிப்பில் அதிக பாதிப்பு அநேகருக்கு ஏற்படுவதுண்டு. இவ்வாறு வருவோருக்கு முதலில் ரத்தக் கொதிப்பினை பரிசோதனை செய்வர்.
இந்த ரத்த அழுத்தம் நிமிடத்திற்கு நிமிடம், ஒருவரின் மனநிலை, வேலை, உடல் நின்ற நிலை, உட்கார்ந்த நிலை, படுத்த நிலை இவற்றிக் கேற்ப மாறும். 5.40 mmll+g வரை மாறுதல் இருக்கலாம். சில ரத்த அழுத்த மாறுதல்களுக்கான காரணங்களை அறிந்து கொண்டால் அவைகளை தவிர்த்து விடலாம்.
* ரத்த அழுத்த பரிசோதனைக்கு முன் 5 நிமிடமாவது சற்று அமைதியாய் இருத்தல் வேண்டும். ஓடி வருவது, மாடி ஏறி வருவது, படபடப்பு, டென்ஷன் போன்றவை சரியான ரத்த அழுத்த அளவினை காட்டாது.
* நல்ல சவுகர்யமான நாற்காலியில் முதுகு, கைகளுக்கு வசதியான இடம் இருக்க, இருகால்களையும் சீராக வைத்த நிலையில் ரத்த அழுத்தத்தினை பரிசோதிக்க வேண்டும்.
* சிலருக்கு பரிசோதனை, மருத்துவர் என்றாலே படபடப்பு கூடி விடும். அவ்வாறு இருந்தால் ரத்த அழுத்த அளவு கூடுதலாகவே காட்டும்.
* நர்ஸோ, டாக்டரோ உங்களை பரிசோதனை செய்யும் பொழுது ‘தொண தொண’ வென்று பேசாதீர்கள். உங்கள் சந்தேகங்களை பேப்பரில் எழுதி பிறகு கேட்கவும்.
* பரிசோதனைக்கு முன் கண்டிப்பாய் சிகரெட் பிடிக்காதீர்கள். பரிசோதனைக்கு 30 நிமிடங்கள் முன்பாவது சிகரெட் பிடிக்காதீர்கள்.
* காபி, டீ போன்றவைகளை 30 நிமிடங்கள் முன்பாவது நிறுத்துங்கள்.
* சிறுநீர் வயிற்றில் இருக்க ரத்த அழுத்த பரிசோதனை செய்யாதீர்கள். சிறுநீரை முழுமையாக வெளியேற்றி விடுங்கள்.
* குறைந்த அளவு சர்க்கரை எடுத்துக் கொள்வது ரத்த அழுத்தத்தினை சீராய் வைக்கும்.
யாருக்குமே அதிக வெப்பம் தாங்க முடியாத ஒன்றுதான். ஆனால் சிலருக்கு கொஞ்சம் சூடு கூட தாங்க முடியவில்லை என்பார்கள். இவர்களுக்கு உடல் சிறிதளவு உஷ்ணத்தினை கூட தாங்கும் சக்தி இருப்பது இல்லை. இதற்கு என்ன காரணங்கள் இருக்கக் கூடும் என்பதனைப் பார்ப்போம்.
* அலர்ஜி, ரத்த கொதிப்பு போன்றவைகளுக்காக கொடுக்கப்படும் மருந்துகள் ரத்த ஓட்டத்தினை மட்டுப்படுத்தும். இவை உடல் வெப்பத்தினை தாங்கும் நிலையினை பாதிக்கலாம்.
* காபி போன்ற கேபின் அடங்கிய பானகங்கள் இருதய துடிப்பினை கூட்டும். இது உஷ்ணத்தினை கூட்டும். இதனால் வெப்பம் தாங்கக் கூடிய நிலை குறையலாம்.
* கூடுதல் தைராய்டு ஹார்மோன் சுரப்பதினால் இந்த பாதிப்பு ஏற்படலாம்.
எனவே நான்கு வயதுக்கு குறைவான குழந்தைகள், 65 வயதினைத் தாண்டிய முதியவர்கள், அதிக எடை உடையோர் ஏற்கனவே உடல் நல பாதிப்பில் இருப்போர் ஆகிய அதிக உஷ்ணமுடையவர்கள் கோடை காலத்தில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.