கோயில்களுக்கும், விகாரைகளுக்கும் சென்றுவருகின்ற பௌத்த, இந்து மக்களைப் பார்த்து சிவபெருமானும், புத்தரும் சிரிக்கின்றனர் என நீதிபதி விஜிதகேரத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில், விகாரைகளில் புத்தருடன், சிவபெருமான், விநாயகர், விஷ்னு ஆகிய கடவுள்களின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அதேபோல் இந்துக் கோயில்களில் புத்தரின் சிலை உள்ளது. பௌத்தர்களும், இந்துக்களும் தமது கோவில்களுக்குச் சென்று வழிபட்டு வருகின்றனர்.
ஆனால் அவர்கள் வெளியில் வந்ததும் மோதிக்கொள்கின்றனர். இதனால் புத்தரும், சிவபெருமானும் இவர்களைப் பார்த்துச் சிரிக்கின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் புத்தசாசன அமைச்சு தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றுக்கொண்டிருந்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது குறுக்கிட்ட கெகலிய ரம்புக்வெல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களில் ஒருவர்தான் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். வடக்கில், பௌத்த விகாரைகளை நிர்மாணிக்கமுடியாது என்று அவர் கொண்டுவந்திருக்கும் யோசனைகளை எம்மால் ஏற்றுக்கொள்ளமுடியாது. வடக்கில் 19ஆயிரம் சிங்களவர்கள் இருந்தனர். அதேபோல 80 ஆயிரம் முஸ்லிம்கள் இருந்தனர் எனத் தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த நீதிபதி விஜித கேரத், சிலருக்கு இனவாதமே ஒட்சிசன், இது அதிகாரத்தைப் பிடிக்கும் செயலாகும். எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கூறியதுபோல் பௌத்தர்களின் அதிகாரத்தில் எந்தவொரு மாற்றங்களும் ஏற்படுத்தப்படாது. நாங்கள் பிரித்தானியர்களின் பிரித்தாளும் தந்திரத்தினால் இன்னமும் சேற்றில் குளித்துக்கொண்டே இருக்கின்றோம், அதிலிருந்து மீண்டௌவேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.