ஜெயலலிதா மரணம் அடைந்ததாக கூறப்பட்ட டிசம்பர் 5 மற்றும் டிசம்பர் 6ஆம் தேதி என்ன நடந்தது என்பதை போயஸ் கார்டனில் காவல்காக்கும் விசுவாசமான அதிகாரி பத்திரிகை ஒன்றுக்கு கொடுத்த ரகசிய பேட்டி இதோ:
அன்று மாலை நேரத்திலேயே பல கார்கள் போயஸ் கார்டனுக்கு வந்துள்ளன. அனைவரும் சசிகலாவின் மன்னார்குடி சொந்தக்காரர்கள். அவர்களை உள்ளே விடலாமா என்று சந்தேகம் அங்குள்ள காவலர்களுக்கு எழுந்துள்ளது. ஏனென்றால் அவர்கள் அனைவரும் போயஸ் கார்டன் பக்கமே வரக்கூடாது என்று துரத்தி அடிக்கப்பட்டவர்கள். சசிகலா அனுமதி அளித்ததை அடுத்து உள்ளே சென்றுள்ளனர். வீட்டிற்குள் நுழைந்தவர்கள் அவரவர் விருப்பப்படி வலம் வரத்தொடங்கியுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவை தயார் செய்ய சொல்லி சாப்பிட்டுள்ளனர். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரிய சமையல் செய்யும் 66 வயது பெண்மணி அவர்களுக்கு சமையல் செய்து கொடுத்துள்ளார். அவர் ஜெயலலிதாவை உயிருக்கு உயிராக நேசித்தவர்.
மாலை 7 மணிக்கு அப்போலோவில் இருந்து தொலைபேசியில் அழைத்த சசிகலா மடிசார் புடவை, கைக்கடிகாரம், வைரம் பதித்த டாலர் செயின், மோதிரம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு வரச்சொல்லி இருக்கிறார். அப்போதே காவலர்களுக்கு தெரிந்துவிட்டது ஜெயலலிதா உடல் நிலை மோசமாக உள்ளது என்று. பின்னர் மாவிலை, சந்தனக்கட்டை என்று ஒவ்வொன்றாக வீட்டிற்கு வந்துள்ளது. இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதா இறந்துவிட்டதாக வயர்லெய் மூலம் தகவல் வந்துள்ளது. போயஸ் கார்டனில் இருந்தவர்கள் அனைவரும் கதறி அழுதுள்ளனர். டிசம்பர் 6 அதிகாலை ஜெயலலிதாவின் உடல் வீட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்கை எங்கிருந்தோ அழைத்து வந்துள்ளனர்.
இறுதிச்சடங்குகளை சசிகலா செய்ய அருகில் தீபக் நின்றிருக்கிறார். அதன் பின் சமபிரதாயங்களை திவாகரன் முதல் மன்னார்குடியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள் செய்துள்ளனர். இவை எல்லாம் முடிய அதிகாலை 5.30 மணி ஆகிவிட்டது. அதன் பின் உடலை ராஜாஜி ஹாலுக்கு எடுத்துச்சென்றனர். வேதா இல்லத்தில் சிங்கம் போல வளைய வந்த ஜெயலலிதாவை அந்த நிலையில் பார்த்தால் எல்லோருடைய கண்களும் குளமாகிவிடும் என்று அந்த அரசு அதிகாரி கூறியுள்ளார்.