ஷாருக்கானின் பண்ணை வீடு இடிப்பு: ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை

இந்தி திரையுலக சூப்பர் ஸ்டார் நடிகர் ஷாருக்கான் மும்பை பாந்திரா, பேண்ட் ஸ்டாண்டு பகுதியில் உள்ள மன்னத் என்ற அழைக்கப்படும் பங்களா வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். ஷாருக்கானுக்கு ராய்காட் மாவட்டம் அலிபாக்கில் கடற்கரை அருகே பண்ணை வீடு ஒன்று உள்ளது. 1 ஏக்கர் பரப்பளவில் சுற்றுச்சுவருடன் இந்த வீடு அமைந்து உள்ளது. மேலும் அங்கு பல்வேறு தொழில் அதிபர்களுக்கு சொந்தமான பங்களா வீடுகளும் உள்ளன. இந்த நிலையில், இங்குள்ள அரசு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதாக புகார் எழுந்தது.

இந்த புகாரை தொடர்ந்து அண்மையில் ராய்காட் மாவட்ட நிர்வாகம் நில அளவை மேற்கொண்டது.

இதில் 2 ஏக்கர் அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. அந்த இடத்தில் தான் நடிகர் ஷாருக்கானின் பண்ணை வீடும் கட்டப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஷாருக்கானின் பண்ணை வீட்டை பொக்லைன் எந்திரம் கொண்டு ராய்காட் மாவட்ட நிர்வாகம் இடித்து தள்ளியது.

கடந்த ஆண்டு மும்பையில் உள்ள அவரது மன்னத் பங்களா வீட்டின் வெளியே சட்டவிரோதமாக கட்டப்பட்டு இருந்த கான்கிரீட் சரிவு பாதை இடித்து தள்ளப்பட்டது நினைவுகூரத்தக்கது.