வாட்ஸ்அப் க்ரூப்பை எப்போதும் ஆக்டிவாக வைத்திருக்க வேண்டுமா?

வாட்ஸ்அப் க்ரூப்ஸ் அட்ராசிட்டியை பற்றி எழுதினால், எழுதிக்கொண்டே இருக்கலாம். அந்தளவுக்கு வாட்ஸ் அப்பில் க்ரூப் சாட்டில் தொல்லைகள் அதிகம். ஆனாலும் கூட நமக்குப் பிடித்த நண்பர்கள், அலுவலக பணியாளர்கள் என சிலரை இணைத்துவிட்டு ஒரு குழுவை துவங்கி, அதனை நடத்திவருவோம்.

புதிய குழுவைத் தொடங்கிய அன்று, நண்பர்களால் களைகட்டும். பிறகு நாளடைவில் சிலபல ஸ்மைலிகள் கூட இல்லாமல், க்ரூப் காலியாக கிடைக்கும். கொண்டாட்டங்கள், சண்டைகள், வாழ்த்துக்கள் என செய்திகளால் பொங்கிவழிந்த பல க்ரூப்கள் கேட்பாரற்று கிடைக்கும். அப்படி உங்கள் குழுவும் ஆகாமல் இருக்க, ஒரு க்ரூப் அட்மினாக நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் இவைதான்!

அட்மின் மட்டுமே க்ரூப் அல்ல!

வாட்ஸ்அப்பில் குழுவை துவங்கியது வேண்டுமானால் நீங்களாக இருக்கலாம். ஆனால் உங்கள் குழுவினைப் பொறுத்தவரை, ஒவ்வொருவருமே முக்கியம்தான். எனவே உங்கள் குழுவில் உங்களோடு சேர்த்து, இன்னும் சில அட்மின்களை உருவாக்குங்கள். புதியவர்களை குழுவில் இணைக்காவிட்டாலும் சரி, இருப்பவர்கள் காரணம் இன்றி, வெளியேறாமல் இருக்க வைப்பதுதான் உங்கள் சாமர்த்தியம்.

அப்டேட் ரொம்ப முக்கியம்:

உங்கள் குழு நீண்ட நாளாக அமைதியாக இருந்தால், முதலில் நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் குழுவின் பெயர் மற்றும் டி.பி.யை மாற்றுவது. அடிக்கடி இவற்றை அந்தந்த நேரங்களுக்கு ஏற்றவாறு, ட்ரென்ட் பார்த்து அப்டேட் செய்யுங்கள். எப்போதும் உங்கள் க்ரூப், அமைதியாக இருக்க விடாமல், அனைவரது காட்சியிலும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். ஆனால் க்ரூப்பில் இருக்கும் யார் மனதையும் புண்படுத்தும் பதிவுகள் மட்டுமே வேண்டாம்.

பேசு..பேசவிடு!

குழுவில் ஒவ்வொருவர் பேச்சுக்கும் மதிப்பளியுங்கள். குழுவில் இருப்பவர்களின் பிறந்தநாள், ஃபேஸ்புக் போஸ்ட், ட்வீட், டிபி என சகலவிஷயங்களிலும் அப்டேட்டாக இருங்கள். தினமும் இதுபோல ஏதேனும் ஒரு டாபிக் க்ரூப்பில் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்.

ஷேரிங் நல்லது!

போட்டோ, வீடியோ, Gif, ஆடியோ என பல வடிவங்களில் உங்கள் தகவல்களை பரிமாறிக் கொள்ளும் வசதி இருக்கிறது. அவற்றை பயன்படுத்துங்கள். காமெடி ஜோக்ஸ், மீம்ஸ் என மற்றவர்களை மகிழ்விக்கும் விஷயங்களை அதிகமாக பகிர்ந்து கொள்வது எப்போதும் க்ரூப்பை கலர்ஃபுல்லாக வைத்திருக்கும்.

அட..இது இல்லாத இடமா?

நட்புக்கு அழகே அடிப்பதும், அணைப்பதும்தான். எனவே க்ரூப் மட்டும் அகிம்சையாக இருக்குமா? சின்ன சின்ன சீண்டல்கள், சண்டைகள் ஆகியவைதான் க்ரூப்பின் அழகே. அவற்றை ரசியுங்கள். தடுக்காதீர்கள்!

சரியான நேரத்தை தேர்வு செய்யுங்கள்!

உங்கள் குழுவின் தன்மையைப் பொறுத்து இந்த பாயின்ட் உங்களுக்குப் பொருந்தும். அலுவலகம் தொடர்பான குழு என்றால் மாலை மற்றும் இரவு நேரங்களில் அதிகம் ஆக்டிவாக இருப்பார்கள். விடுமுறை தினங்களில் ஆன்லைன் இருப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும். இதுபோல உங்கள் குழுவில் இருப்பவர்களின் ஒய்வு நேரம் பார்த்து, க்ரூப் சாட்டிங்கை துவங்கலாம். எப்போது அதிகம் பேர் பேசுகிறார்களோ, அந்த நேரத்தில் தொடர்ந்து குழுவில் உரையாடலாம்.

தொடர்புக்கு எல்லைக்கு அப்பால்…

கல்லூரி, பள்ளி க்ரூப்கள் பெரும்பாலும் அமைதியாக மாற முக்கியக் காரணம், குழு உறுப்பினர்கள் பிரிந்து விடுவது. ஒன்றாக படிக்கும், ஒரே அலுவலகத்தில் வேலை செய்யும் போது துவங்கப்பட்ட க்ரூப், அந்த இடத்தில் இருந்து அனைவரும் பிரிந்ததும் அமைதியாக மாறிவிடும். அதுபோன்ற சமயங்களில் உங்கள் பழைய நினைவுகள், நண்பர்களின் படங்கள் போன்றவற்றை எல்லாம் அடிக்கடி பகிர்வதன் மூலமாக, உங்கள் பிணைப்பு எப்போதும் வலுவாக இருக்கும்.