திருமணத்திற்கு பின்பும் கணவரின் அனுமதியுடன் நடிப்பேன்: சமந்தா

சமந்தா, நாக சைதன்யா காதல் திருமணம் செய்துகொள்ள உள்ளனர். இந்த அறிவிப்புக்கு முன்புவரை நாக சைதன்யாவுக்கு படங்கள் எதுவும் பெரிய ஹிட்டாக அமையவில்லை. சமந்தாவுடன் திருமணம் என்றதும் அவருக்கு ஹிட் ராசி ஒட்டிக்கொண்டது. பிரேமம் உள்ளிட்ட சமீபத்தில் அவர் நடித்த படங்கள் ஹிட்டானது. இதில் குஷியில் மிதந்துக் கொண்டிருக்கிறார்.

ஆனால் சமந்தாவின் நிலை தலைகீழாக மாறிவிட்டது. விஜய், சூர்யா என டாப் ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்துக் கொண்டிருந்தவருக்கு தற்போது பட வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது. ஏற்கனவே நடிக்க ஒப்புக்கொண்டிருந்த படங்களும் கைநழுவியது. இது அவருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

இது குறித்து சமந்தா கூறுகையில், என்றைக்கு எனது திருமணம் பற்றி அறிவித்தேனோ அன்றுமுதல் எனக்கு பட வாய்ப்புகள் குறையத் தொடங்கிவிட்டன. வந்துக்கொண்டிருந்த வாய்ப்புகள் எங்கே போனது? என்ன ஆனது? ஒன்றும் புரியவில்லை. முன்பிருந்த அதே சமந்தாதான் இப்போதும் இருக்கிறேன். அடுத்தடுத்து ஹிட் படங்கள் தந்திருக்கிறேன். எதற்காக எனக்கு திடீரென்று பட வாய்ப்புகள் தரப்படுவதில்லை.

நானும் சைதன்யாவும் அடுத்த ஆண்டு இறுதியில்தான் திருமணம் செய்ய முடிவு செய்திருக்கிறோம். அவரும் அவரது குடும்பத்தினரும் எனக்கு ஆதரவாக இருக்கின்றனர். ஒரு படிமேலே சென்று நான் (சமந்தா) தொடர்ந்து நடிப்பேன் என்று சைதன்யாவே அறிவித்திருக்கிறார்.

எனது எதிர்கால திட்டம் பற்றி இன்னும் சிலர் தவறாக கூறிக்கொண்டி ருந்தால் அவர்களுக்கு நான் என்ன சொல்வது? திருமணம் வரை காத்திருக்க வேண்டியதுதான். அதன்பிறகு நடிப்பில் நான் எவ்வளவு தீவிரமாக இருக்கிறேன் என்பதை நிரூபிப்பேன்- என்றார்.