ஐயப்பன் கோவிலுக்கு இடதுபுறம் சுமார் முன்னூறு அடி தூரத்தில் மஞ்சமாதா என்கிற மாளிகைபுரத்து அம்மனின் கோவில் அமைந்துள்ளது. ஐயப்பனின் தரிசனம் முடிந்ததும் கீழே இறங்காமல் மஞ்சமாதா கோவில் செல்வதற்கு நடைமேடை அமைத்திருக்கிறார்கள்.
மஞ்சமாதாவின் கோவில் சென்றதும் முதலில் நாம் வணங்க வேண்டியது ஸ்ரீ கடுத்தசுவாமியைத்தான். மிகுந்த சக்தி படைத்த தெய்வம். பிறகு அங்கிருந்து மணிமண்டபம் செல்ல வேண்டும். இந்த மணிமண்டபம் ரொம்ப அழகானது. இங்கே தான் மகரவிளக்கன்று வரும் திருவாபரணப் பெட்டியை இறக்கி வைப்பார்கள்.
ஜோதி தரிசனத்திற்கு பிறகு சபரிமலை வரும் பந்தள ராஜ பரம்பரை மன்னரும் அவர் குடும்பத்தாரும் இங்குதான் தங்குவார்கள்.
இந்த மஞ்சமாதா கோவிலில் மணிமண்டபத்திற்கு அருகில் நாகராஜா, அதற்கு அருகில் நவக்கிரகங்கள் உள்ளன. இவற்றை ஐயப்ப பக்தர்கள் சுற்றி வந்து வணங்குவார்கள்.
இதன் வலது பக்கம் சுவரை அடுத்து காட்டுத் தேவதைகள், நாகயட்சி அமைந்துள்ளன. இவற்றுக்கு மஞ்சள் தூவி வழிபடுவது வழக்கமாக உள்ளது.
மஞ்சமாதா கோவில் எளிமையாகக் காணப்பட்டாலும் வெகு அழகாக நேர்த்தியாக உள்ளது. மஞ்சமாதாவின் வரலாறும் சுவையானது.
மகிஷி என்ற அரக்கியை மணிகண்டன் காட்டில் வதம் செய்த உடனே அந்த மகிஷியின் உடலிருந்து லீலா என்ற தேவதை போன்ற பெண்ணொருத்தி வெளிவந்து ஐயப்பனை வணங்கி ‘நான் உங்கள் மூலம் சாப விமோசனம் அடைந்தேன். என் சாபம் நீங்குவதற்கு காரணமாக இருந்த நீங்களே என் கணவராக வரவேண்டும். என்னை ஏற்றுக்கொள்ளுங்கள்…’ என வேண்டினாள்.
ஐயப்பன் அவளிடம் ‘நான் இந்த ஜென்மம் முழுவதும் பிரம்மச்சாரியாய் இருப்பதாகச் சத்யப்பிரமாணம் செய்துள்ளேன்…’ என்று கூறி அந்த பெண்மணியை சபரிமலையில் பிரதிஷ்டை செய்து கோவிலின் இடப்புறம் மாளிகைபுறத்து அம்மன் என்ற பெயரில் அமர்ந்து இங்கே என்னைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அருள்புரிந்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
ஐயப்பன் கேட்டுக்கொண்டபடி, அந்த பெண் சபரிமலையில் மஞ்சமாதா என்கிற மாளிகைபுறத்தம்மனாக அமர்ந்து இன்றளவும் அருள்பாலித்து வருகிறாள்.
பக்தர்கள் மஞ்சமாதாவிற்கு மஞ்சள் பொடி தூவியும், அவளது திருக்கோவில் பிரகாரத்தைச் சுற்றி தேங்காயை உருட்டியும் வழிபாடு செய்து அவளது அருளைப் பெற்று வருகிறார்கள்.
மஞ்சமாதா கோவிலில் சில ஐயப்ப பக்தர்கள் ரவிக்கைத் துண்டு வைத்தும், வெடிவழிபாடு செய்தும் வணங்குகிறார்கள். திருமணம் வேண்டிய சிலர் இரண்டு ஜாக்கெட் துண்டுகளைக் கொடுத்து, ஒன்றைத் திரும்பப் பெற்று அதை வீட்டிற்கு எடுத்துச் செல்கிறார்கள். இப்படி வேண்டுதல் செய்திட அடுத்த ஆண்டிலேயே அவர்களது திருமணம் ஏற்பாடாகி இனிதே நடைபெறுகிறது என்று சொல்லப்படுகிறது.
மாளிகைபுரத்திற்கு என்று தனியாக மேல்சாந்தி ஒருவர் இருக்கிறார். மஞ்சமாதா கோவில் பூஜைகள் போன்றவற்றை இவர்தான் செய்கிறார். சபரிமலையில் நடத்தப்படும் முக்கியப் பூஜைகளில் ஒன்று பகசதி பூஜை. இதற்கு ரூபாய் நூற்றி ஒன்றை மஞ்சமாதா கோவிலில் உள்ள தேவஸ்தானம் கவுண்டரில் கட்டி ரசீது பெற வேண்டும். இப்பூஜையை மேற்குறிப்பிட்ட மேல்சாந்திதான் நடத்தி கொடுப்பார்.
பெண்களுக்கு ஏற்படும் சகல நோய், நொடி, பிரச்சினைகளையும், திருமணத்தடையையும் நீங்கச் செய்கிறது இப்பூஜை என்று கூறுகிறார்கள். மஞ்சமாதா கோவில் அருகே உள்ள மணிமண்டபத்தின் எதிரிலே சின்ன வாத்தியம் என்ற இசைக்கருவியைப் புள்ளுவன்கள் என்கிற வாத்தியக்காரர்கள் இசைக்கக் காணலாம்.
சிறுதொகையை அவர்களுக்குப் பக்தர்கள் அன்பளிப்பாக கொடுத்து வாசிக்கச் சொல்கிறார்கள். அந்த இசை கேட்டு அங்கே இருக்கும் சகல தெய்வங்களும் அருளாசி வழங்கி ஆசிர்வதிப்பதாக நம்பப்படுகிறது. ஐயப்பனைக் கண்குளிர தரிசனம் செய்த பிறகு கற்பூர ஆழிவழிபாடு என்றொரு சடங்கை நடத்துகிறார்கள் ஐயப்ப பக்தர்கள்.
குங்குமம், விபூதி, மஞ்சள், மிளகு, பேரீச்சம்பழம், கல்கண்டு, காணிக்கைப் பணம் போன்றவற்றைத் தனித்தனி தட்டில் ஏந்தி ஊதுபத்தி கட்டைக் கொளுத்தி, அதைக் கையில் ஏந்தியவாறு ஒருவரும், பன்னீர் தெளித்துக்கொண்டே இன்னொருவரும், கூட்டமாக குருசாமி தலைமையில் சரணம் கூறிக்கொண்டே அங்கே கண்ணுக்குத் தென்படும் ஒவ்வொரு தெய்வத்தையும் பார்த்து வழிபட்டுக்கொண்டே கோவிலைச் சுற்றி வருவதுதான் இந்த கற்பூர ஆழிவழிபாடு என்பது! இப்படி வழிபடச் செல்லும் போது விபூதித் தட்டில் சூடம் எரிய எடுத்துச் செல்கிறார்கள்.
கூட்டமாகக் குருசுவாமி தலைமையில் செல்பவர்கள் ஐயப்பனின் சன்னதி சென்று, கொடிமரத்துக்கு அப்பால் நின்று சூடம் தீபாராதனை காட்டி ஐயப்பனை மனதார வணங்கி விட்டு உண்டியலில் காணிக்கைப் பணத்தைப் போடுகின்றனர். பின்னர் கன்னி மூல கணபதியையும், அதன் பின் நாகராஜாவையும் வணங்கி விட்டு சரணம் கூறியபடி 18-ஆம் படிக்கு வருகின்றனர்.
அங்கு கருத்தசாமி, கருப்பண்ணசாமி, 18 படிகளுக்கு தீபராதனை செய்து பின்பு வாபர் சன்னதி சென்று வணங்கி விட்டு மஞ்சமாதா சன்னதிக்கும் சென்று வணங்கி விட்டு தங்களது தங்குமிடத்திற்குத் திரும்பி வந்து குருசாமி காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றுக் கொள்வார்கள்.