ஜெயலலிதா நினைவிடம் ரூ.15 கோடியில் உருவாகிறது

மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்துக்கு தினமும் லட்சக்கணக்கான மக்கள் வந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

ஜெயலலிதா சமாதியை பார்ப்பதற்காகவே தமிழ்நாடு முழுவதிலும் இருந்து தினமும் ஏராளமானோர் சென்னைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

ஜெயலலிதா சமாதி அருகே இதுவரை ஆயிரக்கணக்கானோர் மொட்டை போட்டு தங்கள் தலைவி மீதான பாசத்தையும் மரியாதையையும் வெளிப்படுத்தி உள்ளனர். இன்றும் ஏராளமான ஆண்களும், பெண்களும் மொட்டை போட்டனர்.

ஜெயலலிதா சமாதி அமைந்துள்ள இடத்தில் பெரிய நினைவிடம் கட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அந்த நினைவிடத்துக்கான மாதிரி வரை படம் இன்னும் தயாராகவில்லை.

கட்டிடக் கலை நிபுணர்கள் எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்கள். இன்னும் சில தினங்களில் ஜெயலலிதா நினைவிட வரை படம் தயாராகி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எம்.ஜி.ஆர். நினைவிடம் அவர் கொடைத்தன்மையை பிரதிபலிப்பது போல, ஜெயலலிதா வாழ்நாள் சாதனையை பிரதிபலிக்கும் வகையில் நினைவிட அமைப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எம்.ஜி.ஆர். நினைவிட வளாகம் மொத்தம் 8 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில் பாதி இடத்தை ஜெயலலிதா நினைவிடம் பெறும். விரைவில் இதற்கான டெண்டர் விடப்பட்டு கட்டுமானப்பணி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே ஜெயலலிதா நினைவிடத்தை அமைக்க தமிழக அரசு ரூ.15 கோடி ஒதுக்கி இருப்பதாக தெரிய வந்துள்ளது. இது பற்றி அமைச்சர் ஒருவர் கூறுகையில், “புரட்சித் தலைவி அம்மா சமாதி பகுதியில் அளவு எடுக்கும் பணி நடந்து வருகிறது. பணமும் கொடுத்து விட்டோம். விரைவில் நினைவிடம் கட்டி முடிக்கப்படும்” என்றார்.

அடுத்த ஆண்டு (2017) பிப்ரவரி மாதம் 24-ந்தேதி ஜெயலலிதாவின் 69-வது பிறந்த தினம் வருகிறது. அன்று ஜெயலலிதா நினைவிடத்தை திறக்கும் வகையில் கட்டுமான பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

ஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைப்பதற்கு பிரதமர் மோடியை அழைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.