குக்கிராமத்தில் பிறந்து கோடிகளை குவித்த தொழிலதிபர் சேகர் ரெட்டி

வருமான வரித்துறை சோதனையில் ரூ.170 கோடி, 130 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட காட்பாடி தொழிலதிபர் சேகர் ரெட்டி குறித்த பரபரப்பு தமிழகம் முழுவதும் ஏற்பட்டுள்ளது.

எந்தவித சலசலப்பும் இல்லாமல் அமைதியாக அசுர வளர்ச்சியடைந்த இந்த சேகர்ரெட்டி யார்? என்ன தொழில் செய்தார். இவருக்கு மட்டும் எப்படி 2 ஆயிரம் ரூபாய் 500 ரூபாய் புதிய நோட்டுகள் எப்படி கட்டுக்கட்டாக கிடைத்தது என பல்வேறு கேள்விகள் பொதுமக்களிடம் எழுந்துள்ளது.

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா ஆந்திர எல்லையோரத்தில் உள்ள தொண்டான் துளசி கிராமத்தை சேர்ந்த ஜெகநாதன் மகன் சேகர் ரெட்டி (வயது45) பி.ஏ., பட்டதாரி.

இவருடைய தந்தை ஊராட்சிகளில் சிறிய காண்டிராக்ட் பணிகளை செய்து வந்தார். கல்லூரி படிப்பை முடித்த சேகர் ரெட்டி தந்தையுடன் காண்டிராக்ட் பணியில் இறங்கினார்.

பின்னர் ரியல் எஸ்டேட் தொழிலில் ஆர்வம் காட்ட தொடங்கினார். அந்த கால கட்டத்தில் காட்பாடி-திருவலம் மெயின் ரோட்டில் தற்போது வி.ஐ.டி. பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடத்துக்கு அருகே பல ஏக்கர் நிலம் மிக குறைந்த விலையில் சேகர் ரெட்டிக்கு கிடைத்தது.

இந்த இடத்தை பிளாட் போட்டு விற்பனை செய்ததில் பல மடங்கு வருவாய் கிடைத்தது. அதே நேரத்தில ரெயில்வே காண்டிராக்ட் பணியிலும் கவனம் செலுத்தியதாக கூறப்படுகிறது. அப்போது ஆளும் கட்சி நிர்வாகிகள் உதவி தேவைப்பட்டது.

1992-க்கு பின் அப்போது ஆட்சியில் இருந்த காட்பாடி அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்தார்.

இதற்காக ரெயில்வே தொழிற்சங்க நிர்வாகிகளிடம் நெருங்கிய பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டார். 1996-ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது தி.மு.க.வில் இணைந்தார்.

தி.மு.க. ஆட்சிக் காலத்தில் பல்வேறு காண்டிராக்ட் பணிகளை தொடர்ந்தார்.

2001-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் மீண்டும் அ.தி.மு.க. பக்கம் வந்தார். அப்போது அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகளுடன் சேகர் ரெட்டிக்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. தமிழகம் முழுவதும் பாலம் கட்டுதல், சாலை பணிகள் என புதிய கட்டிடங்கள் கட்டுவது என பல்வேறு பணிகளை செய்தார்.

சென்னை தி.நகரில் அலுவலகம் அமைத்து தனது பணிகளை மேற்கொண்டார். 2011-ம் ஆண்டில் மணல்குவாரி தொழில் மீது அவரது கவனம் திரும்பியது. வேலூர், கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மணல் குவாரிகளை ஏலம் எடுத்து மணல் விற்பனை செய்தார்.

இந்த தொழிலில் கோடி கோடியாக பணம் சம்பாதித்தார். அன்று முதல் இன்று வரை காண்டிராக்ட் மற்றும் மணல் குவாரி தொழில் செய்து வருகிறார்.

ஆந்திராவில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

இவரது தலைமையில் திருப்பதி கோவிலில் ஏராளமான பணிகள் நடந்தன. சேகர் ரெட்டி தனது சொந்த பணம் ரூ.67 லட்சம் செலவில் கோவிலுக்கு புதிய கோ சாலை கட்டி வருகிறார். இந்த பணிகள் தற்போது துரிதமாக நடந்துவருகிறது.

திருப்பதி தேவஸ்தான உறுப்பினராக இருப்பதால் லட்டு பிரசாதம் வாங்கிக் கொடுத்து தமிழக அரசியல்வாதிகளுடன் நெருக்கமானார். அ.தி.மு.க. முன்னணி தலைவர்களுடன் நல்ல தொடர்பு ஏற்பட்டது.நெருக்கம் அதிகமானதால் ஏராளமான கான்டிராக்டர் பணிகள் கிடைத்தது.

வீராணம் ஏரி தூர்வாரும் வேலை மற்றும் சென்னை- புதுச்சேரி சாலை விரிவாக்கம் உள்பட பல கான்டிராக்ட் பணிகளை செய்துள்ளார்.

சென்னை அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டும் என்பதற்காக திருப்பதியில் சிறப்பு வழிபாடு செய்தவர்.

கடந்த அக்டோபர் 12-ந் தேதி அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு வந்து கூடை நிறைய லட்டு பிரசாதம் கொடுத்துச் சென்றார்.

தமிழகத்தின் பெரிய மணல் வியாபாரி என்ற அளவுக்கு உயர்ந்த சேகர் ரெட்டியின் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம், தங்கம் ஆகியவை அனைவரையும் ஆச்சரியத்துடன் அவர் யார் என கேட்க தூண்டியுள்ளது.

காட்பாடியில் விருதம்பட்டு போலீஸ் நிலையம் எதிரே உள்ள அவரது வீடு சீல் வைக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வருமான வரித்துறையினர் அடிக்கடி வந்து வீட்டின் பாதுகாப்பை உறுதி செய்து செல்கின்றனர்.

இந்த வீட்டில் நகை, பணம் பதுக்கி வைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. விரைவில் சோதனை நடத்தப்படும் என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சேகர் ரெட்டியின் மனைவி ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர். இவருக்கு ஒரு மகள் உள்ளார். அவர் சென்னையில் ஒரு கல்லுரியில் முதலாமாண்டு படித்து வருகிறார்.

குடும்பத்துடன் சென்னையில் வசிக்கும் சேகர்ரெட்டி வார விடுமுறை நாட்களில் காட்பாடி வருவார். சொந்த ஊர் மீது கொண்ட பற்று காரணமாக நேரம் கிடைக்கும் போதெல்லாம் காட்பாடிக்கு வந்துவிடுவார் என அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.