ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்தும் தேசிய அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளி பிரச்சினைகளை உருவாக்க முயற்சித்தால், கடும் அரசியல் தீர்மானம் ஒன்றை எடுக்க ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்கத்திற்கு இருந்து கொண்டு அரசாங்கத்தின் பிரதான கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியை விமர்சிப்பவர்கள் அரசாங்கத்தில் இருந்து விலகினால், தனிப் பெரும்பான்மை பலத்தில் ஆட்சி அமைக்க ஐக்கிய தேசியக் கட்சி தயார் நிலையில் இருப்பதாக அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.
ஐக்கிய தேசியக் கட்சி தனித்து ஆட்சியமைக்குமாயின் அதற்கு நேரடியாக ஆதரவு வழங்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.
ஜனாதிபதியும் பிரதமரும் தேசிய அரசாங்கத்திற்காக தெளிவான அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர்.
ஐக்கிய தேசியக் கட்சி தேசிய அரசாங்கத்திற்கு வளைந்து கொடுக்கும் தன்மையில் ஆதரவு வழங்கி வரும் நிலையில், சுதந்திரக் கட்சியை சேர்ந்த சில அமைச்சர்கள் தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகித்து கொண்டு, அரசாங்கத்தில் பெரும்பான்மை பலம் கொண்ட ஐக்கிய தேசியக்கட்சிக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.
இவ்வாறான சூழ்நிலையில், தேசிய அரசாங்கத்திற்கு நெருக்கடி ஏற்பட்டால், அதனால், பாரதூரமான பாதிப்பு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கே ஏற்படும் என அரசியல் தரப்புத் தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன.