நாகரீகம் என்ற பெயரில் பெற்றோர் குழந்தைகளுக்கு செய்யும் தொந்தரவுகள்

நம்மை விட நம் குழந்தைகளை சிறப்பாக வளர்க்கவே நாம் அனைவரும் விரும்புகிறோம். அதிலும் குழந்தைகள் அழகாக இருக்க வேண்டும் என்பதில் நமக்கு அலாதிப் பிரியம். குழந்தைகளை நாகரீகமாக வளர்க்க வேண்டும் என்பதற்காக பலவற்றை நாம் அவர்கள் மீது திணிக்கிறோம். குழந்தைகளுக்கான உடைகள் அவைகளில் ஒன்று.

பாவாடை சட்டையும், வேட்டியும் சட்டையும் போட்டு வளர்ந்த பெற்றோர்க்கு தன் குழந்தைக்கு நவ நாகரீக உடைகள் அணிவித்து வளர்க்க வேண்டும் என்று ஆசை இருக்கலாம். இதுபோன்ற பெற்றோர்களே தற்போது அதிகம். இவர்கள் தங்கள் பையன்களுக்கு வாங்கும் துணிகள் எல்லாம் கரடுமுரடாக, பதினைந்துக்கும் மேற்பட்ட பொத்தான்களுடன் இருக்கின்றன.

பெண் குழந்தைகளுக்கு வாங்கும் துணிகள் எல்லாம் கையில்லாமல், முக்கால்வாசி முதுகு தெரியும்படி, தொப்புளுக்கு மேலே இருக்குமாறு பார்த்தே வாங்குகிறார்கள். இவைகளை சின்ன வயதில் போட்டு அழகு பார்த்தால் தான் உண்டு என்பதே இந்த உடைகளை வாங்குவதற்காக பெற்றோர் கூறும் வியாக்கியானம். ஆனால் இதுபோன்ற உடைகளை எல்லா சூழ்நிலைகளிலும் அணிவிக்க முடியாது.

விஷேசங்களுக்கு செல்லும் போதெல்லாம் இருப்பதில் புதிய உடையை அணிவித்து குழந்தைகளை கூட்டிச் செல்வது தான் நம் கலாச்சாரம். குளிர்காலத்தில் அப்படி வெளியே செல்லும் குழந்தைகள் எல்லாம் கையில்லாமல், முதுகு போர்த்தாமல் நடுங்கிக் கொண்டுதான் செல்கிறார்கள். வெயில்காலத்தில் மோட்டா சட்டை பேண்டுகளை அணிந்து செல்லும் பையன்கள் ஏராளம். விவரம் இல்லாததால் பெற்றோர் சொல்லும் துணிகளை அணிந்து கொள்ளும் இக்குழந்தைகள் விவரம் தெரியும் பருவத்தில் நிச்சயமாக அசௌகரியத்தை உண்டாக்கும் இத்துணிகளை அணியவே மாட்டார்கள்.

குழந்தைகளின் ஆடைகள் காட்டன் துணியினால் தைக்கப்பட்டிருக்க வேண்டும். மெல்லியதாக இளகும் தன்மையுடன் இருந்தால் மிகவும் நல்லது. குளிர் காலம், வெயில் காலம், மழைக் காலம் என எல்லா சூழ்நிலைகளிலும் அணியும் வண்ணம் பொதுவான வடிவமைப்பில் உள்ள துணிகளை வாங்குவதே சிறந்தது. குழந்தைகளுக்கு அதிகப்படியான உடைகள் தேவைப்படுவதால் பொதுவான வடிவமைப்பில் உள்ள துணிகள் அத்தேவையை நிறைவேற்றும். நூற்றுக்கு தொன்னூற்றி ஒன்பது பெற்றோர் குழந்தையின் அளவைவிட இரண்டு சைஸ் அதிகம் உள்ள துணிகளையே வாங்குகிறார்கள்.

குழந்தைகள் வளர வளர சரியாகிவிடும் என்னும் எண்ணமே அதற்குக் காரணம். மிகப்பெரிய சைஸ் உடைகளை வாங்கி பின் குத்துவது, கயிறு கட்டி இறுக்குவது, காலுக்கு கீழே மடித்து விடுவது போன்ற செய்து குழந்தைகளை தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களின் தற்போதைய அளவு உடைகளை வாங்கி அடிக்கடி அணிவிப்பதே நல்லது.

பெண் குழந்தைகளுக்கு கண்ணுக்கு மை தீட்டுவது, உதட்டுக்கு சாயம் பூசுவது போன்றவற்றை சிறு வயதிலிருந்தே அறிமுகப்படுத்துவதில் தவறில்லை. ஆனால் அவைகளை அளவுக்கு மீறி பயன்படுத்துவது குழந்தைகளின் தோலுக்கு எதிர் விளைவுகளை உண்டாக்கும்.

குழந்தைகளுக்கு அணிவிக்கும் செருப்புகள் அதிக இறுக்கமானவையாக இல்லாமல் இருக்க வேண்டும். ஷூக்களும் அப்படியே வாங்கப்பட வேண்டும். சாக்ஸ் இல்லாமல் கண்டிப்பாக ஷூ அணிவிக்கவே கூடாது. அப்படி அணிவிக்கப்பட்ட செருப்பு, ஷூக்களையும் ஒரு மணிக்கு ஒரு முறை கழட்டி கால்களின் இறுக்கத்தை தவிர்ப்பது நல்லது.

திருமணம் போன்ற விஷேசங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் சென்றால் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை அவர்களை சிறுநீர் கழிக்க அழைத்துச் செல்ல வேண்டும். சற்று விபரம் தெரியும் வயது குழந்தைகள் என்றால் சிறுநீர் வருகிறதா என்பதை இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை கேளுங்கள். அவர்களுக்கு அடிக்கடி குடிக்க தண்ணீர் கொடுப்பதும் அவசியம். தேவையான அளவு தண்ணீர் கொடுப்பது குழந்தைகள் சோர்வடையாமல் இருக்க உதவும்.

நம் குழந்தைகள் நாகரீகமாக இருப்பது நல்லது தான். ஆனால் அவஸ்தைக்குள்ளாகக் கூடாது என்பதில் உறுதியாயிருங்கள்.