போலியான கையெழுத்தை பயன்படுத்தி போலி ஆவணம் தயாரித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஐக்கிய தேசியக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக சாட்சியமளிக்க மேல் நீதிமன்றத்தில் ஆஜராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் திஸ்ஸ அத்தநாயக்க, பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்திட்டுள்ளதாக கூறி ஊடகங்களுக்கு ஆவணம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அந்த ஆவணத்தில் மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் கையெழுத்துக்கள் போலியாக இடப்பட்ட போலி ஆவணம் என கூறப்பட்டதுடன் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு தற்போது கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு விசாரணைகளுக்காக எதிர்வரும் மார்ச் 20 ஆம் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு ஏற்கனவே அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.