ட்ரம்பின் அதிரடியை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்த நினைக்கும் சிறீலங்கா!

அமெரிக்காவில் எதிர்வரும் ஜனவரி மாதம் புதிதாகப் பதவிக்கு வரவுள்ள ரொனால்ட் ட்ரம்ப் சீனா, மெக்சிக்கோ நாடுகள் மீது பொருளாதாரத் தடையை விதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதால் தமது ஆடை ஏற்றுமதிக்கு அதிகளவு வாய்ப்புக்கள் ஏற்படும் என சிறிலங்கா ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

அமெரிக்காவில் ஏற்படவுள்ள ஆட்சிமாற்றத்தினால், சிறிலங்காவின் ஆடைத் தொழில் துறை தொடர்பான கொள்கையில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பில்லை என்று Capital Alliance மூலோபாய அதிகாரி புரசிசி ஜினதாச தெரிவித்துள்ளார்.

சிறீலங்காவில் உற்பத்தி செய்யப்படும் ஆடைகளில் 44 வீதமானவற்றை அமெரிக்காவே கொள்வனவு செய்கின்றது.

அண்மையில் மேற்குலகில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் அமெரிக்காவின் புதிய அதிபராக ரொனால்ட் ட்ரம்ப் தெரிவுசெய்யப்பட்டமை ஆகியவற்றினால் ஆடை ஏற்றுமதியில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது.

மாறாக அமெரிக்காவில் நிறுவனங்களை நிறுவி உற்பத்திகளை மேற்கொள்வதற்கும் இதன்மூலம் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதிலுமே ட்ரம்ப் கவனம் செலுத்துவார்.

மெக்சிகோ மற்றும் சீனா மீது அவர் தடைகள், கட்டுப்பாடுகளை விதிப்பாரேயானால் அது சிறிலங்காவுக்கே உண்மையில் நன்மையாக இருக்கும். இந்த இரண்டு நாடுகளும் ஆடை தயாரிப்புத் துறையில் முக்கிய பங்கு வகிப்பவையாகும்.

ரஸ்யாவை அனைத்துலக அரங்கிற்கு இழுத்து வரும் முயற்சிகளில் டரம்ப் ஈடுபட்டுள்ளார். இதன் விளைவாக ரஸ்யாவின் பொருளாதாரம் திறந்து விடப்படலாம்.

இது, சிறிலங்காவின் தேயிலை ஏற்றுமதி வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்யும். சிறிலங்காவில் உற்பத்தியாவும் 15 வீதமான தேயிலையை ரஸ்யாவே கொள்வனவு செய்கிறது.

தெற்காசியாவில் 40 பில்லியன் டொலர் ஆடைகளுக்கு கேள்வி உள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இலகுவாகவே இதனைக் குறிவைக்கலாம்.

மடிக்கணினியுடன் அமர்ந்திருக்கும் ஒருவர், தனக்குத் தேவையான உடையைத் தெரிவு செய்தால், அது நேரடியாகவே உற்பத்தியாகும் இடத்தில் இருந்து பாவனையாளரின் கையில் கிடைக்கும் வாய்ப்புகளும் உருவாகியுள்ளது” என்றும் அவர் கூறியுள்ளார்.