தொழில்நுட்ப சாதனங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் பேய் ஓட்டும் தொழிலில் கேட்ஜெட்கள் பயன்பாடு அதிகரிப்பதாக தெரியவந்துள்ளது.
மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவில் பேய் இருப்பது குறித்த நம்பிக்கை அதிகளவு காணப்படுகிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் பேய் ஓட்டுவது சார்ந்த வியாபாரத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில் பெங்களூரை சேர்ந்த ராகுல் குமார் என்பவர் பேய் இருப்பதை கண்டறிந்து ஆய்வு செய்ய பல்வேறு கேட்ஜெட்கள் மற்றும் தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்தி வருகின்றார்.
இரவு நேரங்களில் ஆழ்ந்த இருளில் பேய் இருப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள ஆயத்தமாகும் குமார் தன்னுடன் இன்ஃபரா-ரெட் விளக்குகள், ஃபுல் ஸ்பெக்ட்ரம் கேமரா, K2 மீட்டர், எக்கோ Vox ஃப்ரீக்வன்சி மாட்யூலேட்டர் மற்றும் டிரோன் வீடியோ கேமரா உள்ளிட்டவற்றை எடுத்துக் கொள்கிறார். ஒரு இரவிற்கு ஆய்வுகளை மேற்கொள்ள 1000 ரூபாய் கட்டணம் வசூலிக்கும் குமார் மருத்துவராக இருந்து பேய் சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்ள துவங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முந்தைய காலகட்டங்களில் பேய் சார்ந்த ஆய்வுகளை குறிப்பிட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் மட்டுமே மேற்கொண்டு வந்தனர். மண்டை ஓடு, எலுமிச்சை பழம் உள்ளிட்டவற்றை கொண்டு மேற்கொள்ளப்பட்டு வந்த சடங்குகள் இன்று தொழில்நுட்பங்களின் உதவியோடு கேட்ஜெட் வசம் வந்திருக்கின்றன. பேய் ஓட்டும் வழிமுறைகளில் கேட்ஜெட்களின் பயன்பாடு மெல்ல ஆதிக்கம் செலுத்த துவங்கியுள்ளது.
‘உண்மையில் சொல்லப்போனால் 100 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில் கிட்டத்தட்ட 98 ஆய்வுகளில் பேய் சார்ந்த நடவடிக்கை எதுவும் கண்டறியப்படவில்லை. கடந்த ஒன்பது ஆண்டுகளில் நூற்றுக்கும் அதிகமான ஆய்வுகளை மேற்கொண்டதாகவும், இவற்றில் பல ஆய்வுகள் அறிவியல் பூர்வமாக விளக்கக்கூடியதாகவே இருந்தது,’ என ராகுல் குமார் தெரிவித்துள்ளார். இவரது குழுவினர் மேற்கொள்ளும் ஆய்வுகள் ஒரு வாரம் காலம் நீடிக்கும்.
பெரும்பாலும் இந்தியாவில் கிடைக்காத கேட்ஜெட்களை ஆன்லைனில் வாங்கிவந்து, பேய் நடமாட்டம் இருப்பதாக கூறப்படும் பகுதியில் அவற்றை பயன்படுத்தி ஒரு வாரம் தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. பின் சேகரிக்கப்பட்ட தகவல்களை அதற்கு முன் பல ஆண்டுகளாக சேகரித்த தகவல்களுடன் ஒப்பிடப்படுகின்றன.
‘பேய் ஓட்டுவதன் பின்னணியில் இருக்கும் அறிவியலை ஆராய்ச்சியாளர்கள் நிராகரிக்கின்றனர். இவர்கள் சேகரிக்கும் தகவல்களை முழுமையாக அறிந்து கொள்ளாமல் அவை அனைத்தையும் அமானுடத்தில் இணைத்து விடுகின்றனர்,’ என முனைவர் கே.எஸ் சங்குன்னி தெரிவித்துள்ளார். அதிகாரப்பூர்வமாக நிரூபிக்கப்படாத ஒன்றை வைத்து நடக்கும் இதுபோன்ற வியாபாரம் இந்தியா முழுக்க வேகமாக பரவி வருகிறது. பேய் ஓட்டுவது மட்டுமின்றி பேய் இருப்பதாக நம்பப்படும் இடங்களுக்கு மக்களை சுற்றுலா போன்று அழைத்துச் செல்லும் வழக்கமும் அதிகரித்து வருகிறது.