கனவுகள் பற்றி திகைப்பூட்டும் 20 விஷயங்கள்

இனிமை, பயம், அருவருப்பு, துயரம், குழப்பம் என எதுவானாலும் நிஜத்தைவிட அழுத்தமான உணர்வை உறக்கத்தில் பதிக்க வல்லது கனவு. எல்லோருக்கும் கனவு வருவதால், கனவுக்கு எல்லா மொழியிலும் வார்த்தை இருக்கும். ஆனாலும், ’Dreams’ இந்த வார்த்தை, ‘dragmus’ எனற ஜெர்மன் வார்த்தையை மூலமாகக் கொண்டது. அதற்கு, ஏமாற்றுதல், மாயை, மறைமுகம் போன்ற அர்த்தங்கள் உண்டு.

உறக்கத்தில் குறட்டையும் கனவும் ஒரே நேரத்தில் நிகழாது. பெரியவர்களுக்கு கனவு விட்டுவிட்டு மொத்தமாக ஒரு மணிநேரம் வரை சராசரியாக நிகழ்கிறது. அரைமணி முதல் மூன்றுமணி நேரம் வரை கனவுகள் ஒரு நாளில் நிகழலாம். நம் இறப்பு வரையில், வாழ்நாளில் கால் பகுதியை தூங்குவதற்கு செலவிடுகிறோம். அதில் 6 ஆண்டுகள் கனவுகளில் மிதக்கிறோம். ஆனால், அந்த கனவுகள் நம் நினைவில் நிற்பதில்லை.

ஒரு நாளைக்கு 4 வீதம், ஒரு வருடத்தில் சராசரியாக 1,460 கனவுகள் நிகழ்கிறது. சூரிய கடவுளை வணங்கும் எகிப்தியர்கள், கனவுகளை அக்கடவுளின் விளையாடலாக கருதுகின்றனர். ஃபூ கீன் என்ற சீன மாகாணத்தில் இடுகாட்டில் உறங்கும் முன்னோர்கள், தங்களுக்கு ஏற்படுத்தும் குறிப்பாகவே கனவை நினைக்கின்றனர்.

விஞ்ஞான ஆய்வுப்படி, கனவுகளில் காட்சிகள் அதிகமாக வருவதோடு அதன் ஒலிகளும் தொடு உணர்ச்சிகளும் மெய்யாக இருப்பதுவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஆச்சரியம். இதை பருவ வயதில் காதல், காமம் சார்ந்த கனவுகளில் எல்லோருமே உணர்ந்திருக்க கூடும். கிறிஸ்தவ மதத்தின் புதிய ஏற்பாட்டின்படி, ஏசுவின் தந்தையும் மேரியின் கணவருமான ஜோசப்புக்கு ஏற்பட்ட ஆறு கனவுகள் தெய்வீக அறிவு, கட்டளை, எச்சரிக்கை சார்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பிறந்த குழந்தைக்கு 80 சதவீதம் தூக்க நேரமே, அதில் அளவுக்கு அதிகமான கனவுகள் நிகழ்கிறது. புரிந்துகொள்ள முடியாத அந்த பருவம் முற்பிறப்புக்கு மிக நெருக்கமானது அல்லவா? பிளாட்டோவின் கூற்றுப்படி, கனவுகள் வயிற்றுப் பகுதியிலிருந்தே தொடங்குகிறது. கனவுகளுக்கான உயிரியல் இருப்பையும் விவரிப்பையும் கல்லீரலிலே காணமுடிகிறது.

எலியஸ் ஹோவே(1819- 1867) தையல் இயந்திரத்தை கண்டுபிடித்தது கனவில் கிடைத்த உத்வேகமே. மனிதனை சாப்பிடும் மனிதர்களால் தாக்கப்படுவதாகவும், பிறகு, காயங்கள் ஊசி போன்ற ஒரு பொருளால் சரிசெய்யப்படுவது போலவும் கனவில் கண்டார்.

காயங்களால் மனம் மற்றும் உடல் அதிகமாக பாதிப்புக்கு உள்ளான சில நபர்களை தவிர எல்லோருக்கும் கனவு ஏற்படுகிறது. கனவு ஒரு உயிரியல் உண்மை, இதை எல்லோரும் காணுகின்றனர். ஆனால், அதை நினைவில் வைத்துக்கொள்ளாமல் மறப்பதால் சிலர் கனவு வராதவர் போலவும் உணர்கின்றனர்.

ஒவ்வொரு 90 நிமிட இடைவெளிகளிலும் நமக்கு கனவு வருகிறது. நீண்ட கனவுகள்(30-45 நிமிடங்கள்) விடியற்காலையிலே ஏற்படுகின்றன. கனவை பற்றிய ஆய்வுக்கு ‘Oneirology’ என்று பெயர். லத்தீனில் ’ஓனிரோஸ்’ என்றால் கனவு பற்றிய கடவுள். ‘ology’ என்றால் எழுதுதல்.

மேற்கு ஆப்பிரிக்காவில் அசண்டி இனக்குழுவில், சட்டப்படி தண்டனைக்குரிய ஒரு கனவு குற்றமே இன்னும் வழக்கத்தில் உள்ளது. அதாவது இன்னொருவர் மனைவியோடு உல்லாசமாக இருப்பதுபோல ஒருவருக்கு கனவு வந்தால், அது எந்தவிதத்திலாவது வெளியில் தெரிந்துவிட்டால் கனவை கண்டவருக்கு தண்டனை.

கனவுடைய தூக்கத்தில் மூளையில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதனால், உடல் வெப்பநிலையும் அதிகரிக்கும். பற்கள் இழப்பது (அ) உடைவது போன்ற கனவுகள், தனக்கு உதவ யாரும் இல்லை என்ற மனநிலையில் இருப்பவர்களுக்கு ஏற்படும். ஆண்களைவிட பெண்களுக்கே பற்கள் கனவு வரும்.