மணிக்கு சுமார் 100 கிலோமீட்டர் வேகத்தில் இன்று சென்னையை பதம்பார்த்த வார்தா புயலின் கோரத்தாண்டவத்தால் சென்னை நகரின் பல சாலைகள் போர்க்களமாக காட்சியளிக்கின்றன.
இன்று பிற்பகல் 2 மணியளவில் வர்தா புயலின் மையப்பகுதி சென்னை அருகே கடக்க தொடங்கியது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசி வருவதால் முக்கிய சாலைகளில் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளது. இதனால், போர்க்களங்களில் சாய்க்கப்பட்ட மனித உடல்களைப்போல் சாலையோரங்களில் முறிந்து விழுந்த மரக்கிளைகள் குப்பைமேடாக காட்சியளிக்கின்றன.
இதனால் பல பகுதிகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மரங்கள் விழுந்ததால் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் சேதம் அடைந்துள்ளன. சாலையில் விழுந்த மரங்களை அகற்றும் பணியில் தீயணைப்பு படையினர் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், சென்னையில் பல இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. சென்னையின் பல இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
அடையாறு, கோட்டூர்புரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆங்காங்கே வெள்ளநீர் தேங்கி நிற்பதால் இந்த பாதைகளில் வாகனங்கள் மிக மெதுவாக ஊர்ந்துச் செல்கின்றன.வார்தா புயல் கரையை கடந்த பின்னர் தெற்கு திசையில் இருந்து பலத்த காற்றும், கன மழையும் தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.