தமிழ் மக்களின் துயர்தோய்ந்த வாழ்விற்கு யார் பொறுப்பேற்பது?

அரசியலில் வாய்ப்புகள், ஆபத்துக்கள், சவால்கள் என மூன்றும் ஆங்காங்கே விரவியிருக்கும். இந்த மூன்றுக்கும் மத்தியில் வெற்றிகரமாக நடைபோடுவதிற்தான் தலைமைத்துவங்களின் சாதனைகள் தங்கியுள்ளன.

இந்நிலையில் வாய்ப்புகளை சரிவர அடையாளங்காண்பதும் ஆபத்துக்களை முன்னுணர்ந்து தவிர்த்துக் கொள்வதும் அல்லது கடந்து செல்வதும் சவால்களை வெற்றிகரமாக சமாளிப்பதும் என்பதன் மூலமே ஒரு தலைமைத்துவத்தால் அதற்கான சாதனையை நிலைநாட்டவோ அல்லது முத்திரையை பதிக்கவோ முடியும்.

சரி–பிழை, நல்லது-கெட்டது, நீதி-நியாயம் என்பன பற்றி விருப்பு-வெறுப்புக்களுக்கு அப்பால் அறிவுசார்ந்து ஆராயக்கூடிய மனமுதிர்ச்சி இருந்தால் தான் தக்கதை ஏற்று தகாததைத் தவிர்க்கவும் முன்னேறுவதற்கான வாய்ப்பைக் கண்டறியவும் முடியும். ஆனால் எம்மத்தியில் இக்கலாச்சாரம் பலவீனமானதாகவே உள்ளது.

முற்கற்பிதங்கள் சார்ந்த அல்லது விரும்பம் சார்ந்த எண்ணங்களினால் நாம் சரியானவற்றை கண்டறிந்து அவற்றை அடைய முடியாது உள்ளது. இந்தவகையில் சரிக்கும் மேற்படி விருப்பங்களுக்கும் இடையே உள்ள இடைவெளியில் யதார்த்தத்தை எடைபோடவும், சரியானதை கண்டுகொள்ள முற்படுவதும் என்பன நெருப்பில் நடப்பதற்கு ஒப்பானதாகும்.

ஆனால் முள்ளிவாய்க்கால் பெருநெருப்பிற்குப் பின்பு மேற்படி அறிவுசார் அரசியல் அணுகுமுறைகளைப் பற்றிப் பேசத் தவறுவது தமிழினத்தின் எதிர்கால நலனுக்கான வாய்ப்புக்களை கண்டறியத் தவறுவதாக அமையும்.

அதுவே தமிழ் மக்களின் எதிர்கால தோல்விகளுக்கான மாபெரும் தொடர் தவறாகவும் அமைந்துவிடும். ஆதலால் விருப்பத்திற்கும் யதார்த்த உண்மைகளுக்கும் இடையில் அறிவியல் சார்ந்த

நெருப்பணை மீது நடைபோட வேண்டியது இன்னொரு துயரகரமான யதார்த்தம் என்பதை கருத்தில் எடுக்கத் தவறவும் முடியாது.

ஈழத் தமிழரின் ஒரு நூற்றாண்டுகால அரசியலை பொதுவாக எடுத்து ஆராயும் போது தமது பிரச்சினைகளுக்கு தீர்வுகாணத்தக்க ஒரு முழுமைப்படுத்தப்பட்ட, மூலோபாயம் (Overall Strategy) பெரிதும் இருந்ததில்லை.

இதில் இரண்டு விடயங்கள் கவனத்திற்குரியது. ஒன்று ஈழத் தமிழ்த் தலைவர்கள் ஈழத்தமிழரின் பிரச்சினையை பெரிதும் உள்நாட்டுப் பிரச்சினையாகப் பார்த்தார்களே தவிர அதற்கு இருக்கக்கூடிய புவிசார் அரசியல் மற்றும் பூகோள அரசியல் தொடர்பான சர்வதேச பரிமாணத்தில் வைத்து அதனைப் புரிந்து கொள்ளவில்லை.

ஏறக்குறைய 1981ஆம் ஆண்டு வரை இத்தகைய புரிதலே முற்றிலும் இருந்தது. இரண்டாவதாக சிங்கள பேரினவாதத்தை எதிர்கொள்வதற்கான அரசியல் உபாயங்கள் எதுவும் முழுநீள வடிவில் இருக்கவில்லை.

கூடவே அரசியல் தலைவர்கள் அனைவரும் விதிவிலக்கின்றி பகுதிநேர தலைவர்களாகவே இருந்தனர். இதனால் அரசியலை சிந்தனைத் தளத்திற்கு இட்டுச் செல்ல அவர்களுக்கு நேரம் இருக்கவில்லை.

1977ஆம் ஆண்டு அ.அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்கும் வரை அனைத்து தமிழ்த் தலைவர்களும் தொழில் புரியும் பகுதி நேர அல்லது ஓய்வு நேர அரசியல் தலைவர்களாகவே இருந்தனர்.

இப்பின்னணியில் தமிழ்த் தலைவர்களிடம் அறிவுபூர்வமான அரசியல் வளர்ச்சிக்கு வாய்ப்பில்லாது போனதுடன் எந்தவொரு தமிழ்த் தலைவர்களிடமும் State Craft இருக்க வாய்ப்பும் இல்லாது போனது.

தமிழ்த் தலைவர்கள் மிகப் பெரும் சட்ட நிபுணர்களாக இருந்தாலும் சிங்களத் தலைவர்களின் முழுநேர அரசியலுக்கு ஈடுகொடுக்க முடியாதவர்களாயும், சிங்களத் தலைவர்களுக்கு இருக்கக்கூடிய State Craft சிறிதும் அற்றவர்களாயும் இருந்தனர்.

சிங்களத் தலைவர்களிடம் முழுநேர அரசியல் ஈடுபாட்டின் மூலமும் அரச நிறுவனம் சார்ந்த அனுபவத்தின் மூலமும் அரசியல் மதிநுட்பம் மிக நுணுக்கமாக வளர்ச்சியடைந்திருந்தது.

இதனால் எந்தொரு தமிழ்த் தலைவரையும் மிக இலாவகமாக கையாளவும், தோற்கடிக்கவும் கூடிய ஆற்றல் அவர்களிடம் நீண்ட வரலாற்று வளர்ச்சிப் போக்கில் உருப்பெற்றிருந்தது. அதாவது State Craft என்பது அரச நிறுவனத்தையும், அரசியல் விவகாரங்களையும் கையாளக்கூடிய செயல் நுணுக்கம் கொண்ட திறனாகும்.

தமிழ்த் தலைவர்களிடம் இவ்வாறு State Craft இல்லாதது மட்டுமன்றி தமிழ்த் சமூகத்தில் 1980ஆம் ஆண்டுவரை சர்வதேச அரசியல் சம்மந்தமான கண்ணோட்டமும் இருக்கவில்லை. அதுசார்ந்த திறன்களும் வளர்ச்சியடைந்திருக்கவில்லை.

ஆனால் சிங்களத் தரப்பில் இதற்கான கட்டமைப்புக்களும், இராஜதந்திர நிர்வாக இயந்திர முறைமையும் மற்றும் நிறுவன அமைப்புக்களும் உருப்பெற்றிருந்தன. இதனால் சிங்களத்தலைவர்களின் அரசியல் கையாளல்களுடனும், தீர்மானம் எடுக்கும் திறன்களுடனும் தமிழ்த் தலைமைகளை சிறிதும் ஒப்பிட முடியாத துயரநிலை காணப்பட்டது.

பொதுவாக சர்வதேச அரசியல் சார்ந்து அன்றைய காலத்தில் எம் மத்தியில் காணப்பட்ட அரசியல் பாரம்பரியத்தை விளங்கிக் கொள்ள பின்வரும் உதாரணத்தை நோக்குவது நல்லது.

திருகோணமலையில் இருந்து பிரித்தானிய கடற்படைத் தளத்தையும், கட்டுநாயக்காவில் இருந்து பிரித்தானிய விமானப்படைத் தளத்தையும் அகற்ற வேண்டுமென பண்டாரநாயக்க அரசாங்கம் 1956ஆம் ஆண்டு முடிவெடுத்தது.

அவ்வாறு பிரித்தானிய இராணுவத் தளங்களை அகற்றுவது ஈழத்தமிழரின் பாதுகாப்பிற்கு பாதகமாக அமைந்துவிடுமென்றும் எனவே அத்தளங்களை அகற்ற சம்மதிக்க வேண்டாமென்று

பிரித்தானிய மகாராணியாருக்கு முக்கிய தமிழ்த் தலைவர் ஒருவர் தந்தி அனுப்பியிருந்தார்.

அவர் முழு தமிழ் மக்களுக்கான தலைமைத்துவத்தை கொண்டவராக ஒருபோதும் இல்லாதிருந்தாலும் முக்கிய கல்விமானாகவும், சர்ச்சைக்குரிய ஒரு பிரபலமான தமிழ்த் தலைவராகவும் இருந்தார்.

இங்கு பிரித்தானியாவின் காலனிய ஆக்க கொள்கை பற்றியோ, அல்லது அவர்களின் புவிசார் அரசியல் மற்றும் பூகோள அரசியல் நோக்குநிலை பற்றியோ சிந்திக்காமல் பிரித்தானியாவை தமிழ் மக்களுக்கான நீதிமான்களாகவும், பாதுகாவலராகவும் சிந்திக்கும் ஓர் அரசியல் வறுமை காணப்பட்டமைக்கு இது ஒரு நல்ல உதாரணமாகும்.

இத்தகைய நிலைப்பாடு இந்தியாவிற்கு பாதகமானதாகவும், அது இந்திய அரசுக்கு வெறுப்பை ஏற்படுத்தும் என்பதையும் பற்றி அவரால் சிந்திக்க முடியவில்லை.

இவ்வாறு தந்தியனுப்பிய இதே தலைவர் இந்தியாவிற்கும், பாகிஸ்தானிற்கும் இடையேயான யுத்தத்தின் போதும், இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையேயான யுத்தத்தின் போதும் தெளிவாக இந்தியாவின் ஆதரவாளராகவே இருந்தார்.

இங்கு அவர் அடிமனதில் இந்திய ஆதரவு மனப்பாங்கு இருந்தாலும் வெளியுறவு அரசியல் சார்ந்த அறிவியல் வறுமையின் பின்னணியில் அவர் மேற்கண்டவாறு தந்தியனுப்பும் அரசியலை மேற்கொண்டார்.

இப்பின்னணியிற்தான் பாரம்பரிய அரசியல் தலைவர்களின் வெளியுறவு சார்ந்த அரசியலையும் அதிலுள்ள வறுமையையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஆனால் 1980ஆம் ஆண்டைத் தொடர்ந்து சர்வதேச அரசியல் உறவுகள் தொடர்பாக தமிழர் பக்கம் பாரிய மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின.

யாழ்ப்பாண பொது நூலகம் 1981ஆம் ஆண்டு எரியூட்டப்பட்டதை உடனடுத்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான அ.அமிர்ந்தலிங்கம் அன்றைய இந்தியப் பிரதமர் இந்திராகாந்தியை சந்தித்தார்.

இப்போதுதான் ஈழத்தமிழரின் அரசியலை சர்வதேச அரசியலுடன் இணைத்துப் பார்ப்பதற்கான தொடக்கம் மேற்படி பாரம்பரிய தலைவர்கள் மத்தியில் முதல் முறையாக ஆரம்பமானது.

இதற்கு முன் இத்தலைவர்கள் சிலர் தமிழ்நாட்டிற்கு பயணங்களை மேற்கொண்டிருந்தாலும் அவை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த, வெளியுறவுக் கொள்கை சார்ந்த பரிமாணங்களைக் கொண்டவைகளாக அமையவில்லை.

அக்காலகட்ட தமிழகத்திற்கான தமிழ்த் தலைவர்களின் பயணங்களில் ஒருவகை சுற்றுலாத் தன்மை இருந்ததேதவிர அரசியற் தீர்மானங்களுடன் கலந்த நடைமுறைகளுக்கான பயண

இலக்குக்களை அவை கொண்டிருக்கவில்லை.

ஆனால் 1981ஆம் ஆண்டு இந்திய பிரதமர் இந்திராகாந்தியை தமிழ்த் தலைவர் அமிர்தலிங்கம் சந்தித்த போது அது ஓர் அரசியல் நோக்கிலான பயணமாக அமைந்ததுடன் அரசியல் வேண்டுகோள்களும் முன்வைக்கப்பட்டன.

ஆயினும் இதனைத் தொடர்ந்துங்கூட புவிசார் அரசியல் கண்ணோட்டத்தோடும், சர்வதேச அரசியல் நிலைமைகளோடும் இணைத்து ஈழத் தமிழரின் அரசியலை பார்க்கும் பார்வை மேற்படி பாரம்பரியத் தலைவர்களிடம் குறிப்பிடக்கூடிய அளவு உருவாகவில்லை.

ஆனால் ஆயுதப் போராட்ட இயக்கங்கள் மத்தியில் இதற்கான விழிப்பு நிலை கருக்கொண்டிருந்தது.

1980ஆம் ஆண்டின் ஆரம்பத்திலிருந்து குறிப்பாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பின்னணியிலும் தமிழீழ போராட்ட இயக்கங்களின் பின்னணியிலும் இதற்கான சர்வதேச பரிமாணம் கொண்ட சிந்தனை வேர்விடத் தொடங்கியது.

தெளிவாக 1984-1985 ஆம் ஆண்டுக் காலத்தில் மேற்படி சர்வதேச அரசியலை பகுப்பாய்வு செய்யவதற்குரிய அறிவுசார் வளர்ச்சியை தமிழினம் அடைந்துவிட்டது.

ஆனால் அவை அரசியல் தீர்மானங்களாக, பகுப்பாய்வின் அடிப்படையில் நடைமுறை சாத்தியத்திற்குரிய அணுகுமுறையை எட்டுவதற்கு இன்னும் அதற்கு காலம் தேவைப்பட்டது.

ஆனால் 1983 கறுப்பு யூலை இனப்படுகொலையும், அதனைத் தொடர்ந்து வேகமாக உருவான அரசியல் மாற்றங்களும் இவற்றின் பின்னணியில் மிக வேகமாக ஆயுதம் தாங்கிய இயக்கங்களில் ஏற்பட்ட பெருக்கமும் அந்த இயக்கங்கள் மத்தியிலான கொதிநிலையும், இயக்கங்களுக்குள் காணப்பட்ட கருத்துநிலை குழப்பங்களும் இணைந்து மேற்படி சர்வதேச அரசியல் சார்ந்த, புவிசார் அரசியல் சார்ந்த, பூகோள அரசியல் சார்ந்த இயல்பான முதிர்ச்சி நிலைக்கு போகமுடியாத ஒருவகை முடக்கநிலையை உருவாக்கின.

ஆதலால் அறிவியல் ரீதியான சர்வதேச பார்வைகள் வெம்பிப் போயின.

அறிவியல் வளர்ச்சி மட்டும் ஏற்பட்டால் போதாது அந்த அறிவு உணர்வாக மாறி அந்த உணர்வு தீர்மானமாக மாறி, அந்தத் தீர்மானம் இலக்கை நோக்கிய பயணமாக உருவெடுப்பது என்பது ஒரு குறிப்பிட்ட காலகட்ட வளர்ச்சிப் போக்குக்கு ஊடாக நிகழக்கூடியவை.

அது ஒரு பாரம்பரியமாகவும் ஓர் அரசியல் கலாச்சாரமாகவும் விரிவடைய வேண்டியவை. ஆனால் வேகமாக ஏற்பட்ட அரசியல் வளர்ச்சியின் பின்னணியில் ஏறக்குறைய மேற்படி அறிவியல் வளர்ச்சியானது கருச்சிதைவுற்றுப்போனது.

பகுதிநேர அரசியலுடன் கூடிய State Craft உம், சர்வதேச அரசியற் சிந்தனை பாரம்பரியமும் இல்லாத ஒரு வறிய அரசியல் பின்னணியில் 1976ஆம் ஆண்டு எத்தகைய Overall Strategy இன்றி தமிழீழ கோரிக்கையை அன்றைய தலைவர்கள் முன்வைத்தனர்.

அதனடிப்படையில் 1977ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போது தமிழ் மக்களிடம் “சுதந்திர தமிழீழ அரசு” அமைப்பதற்கான ஆணையை தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி கோரிநின்றது.

மக்கள் அக்கோரிக்கைக்கு அமோக ஆதரவு அளித்தனர். தமிழ் இளைஞர்கள் அதன்பொருட்டு ஆயுதம் தாங்கி போராடப் புறப்பட்டனர். அன்று தமிழீழம் ஆணை கோரி தேர்தலில் நின்று வெற்றி பெற்ற ஆர்.சம்பந்தன் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் உள்ளார்.

அதே போல தமிழீழத்திற்கான ஆணைகோரி பரந்தளவில் மேடைப் பேச்சுக்களின் மூலம் மக்களுக்கு அழைப்புவிடுத்த மாவை சேனாதிராஜா இன்று தமிழரசுக் கட்சியின் தலைவராக உள்ளார்.

அவ்வாறு தமிழீழத்திற்காக ஆணைகோரிய மேற்படி இருவரும் தற்போது தலையாய தலைமைப் பதவிகளில் இருப்பவர்களாகவும், தமிழீழ கோரிக்கையை முன்வைத்தவர்களுள் உயிருடன்

இருப்பவர்களுமான இவ்விருவரும் தமிழீழக் கோரிக்கையை கைவிட்டுவிட்டதாக வெளிப்படையாக 2015ஆம் ஆண்டு தேர்தலில் அறிவித்துள்ளனர்.

தமிழீழ கோரிக்கையை முன்வைத்த காலத்திற்கும், தற்போது தமிழீழ கோரிக்கை கைவிடப்பட்டிருக்கும் காலத்திற்கும் இடைப்பட்ட சுமாரான நான்கு தசாப்பத காலத்தில் ஏற்பட்ட உயிரிழப்புக்கள், சொத்திழப்புக்கள், வாழ்விழப்புக்கள், அழிவுகள், இடப்பெயர்வுகள், புலப்பெயர்வுகள் ஆகிய அனைத்திற்கும் யார் பொறுப்பேற்பது?

1977ஆம் ஆண்டு தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழீழம் அமைக்க ஆணைகோரியதுடன், அத்தகைய ஆணையின் அடிப்படையில் தமிழீழத்திற்கான இடைக்கால அரசாங்கம் (Provisional

Government) அமைக்கப்படுமென கூறப்பட்டது.

இடைக்கால அரசாங்கம் என்ற பதத்திற்குப் பதிலாக தேர்தல் மேடைகளில் “தமிழீழ நிழல் அரசாங்கம்” என்ற பதம் பயன்படுத்தப்பட்டது.

தமிழீழ கோரிக்கை கைவிடப்பட்ட இன்றைய பின்னணியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் 2015ஆம் ஆண்டு தேர்தல் விஞ்ஞாபனத்தில் “பங்கீடான இறைமையுடன் கூடிய வடக்கு-கிழக்கை ஓர் அலகாகக் கொண்டு இணைந்த சமஷ்டி அடிப்படையிலான தீர்வு” என்பது முன்வைக்கப்பட்டுள்ளது.

தற்போது வடக்கு-கிழக்கு இணைப்பு இல்லை என்பது பற்றிய கருத்துக்களே பொறுப்பு வாய்ந்தவர்களால் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இத்தகைய கருத்துக்கள் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் பெரும் சந்தேகங்களையும், அச்சங்களையும் ஏற்படுத்தியுள்ளன.

இப்பின்னணியில் இன்றைய இலங்கையின் அரசியல் நிலைபற்றிய ஒரு பகுப்பாய்வை முற்றிலும் அறிவுபூர்வமாக எடைபோட வேண்டியது அவசியம். முதலில் சிங்களத் தலைவர்கள் நீண்டகால திட்டங்களுடனும், அரசியல் மதிநுட்பத்துடனும், சர்வதேச அரசியல் சார்ந்த முதிர்ச்சியுடனும் செயற்படும் வல்லமையுள்ளவர்கள்.

நெருக்கடிகளைத் தாண்டுவதில் அவர்கள் வல்லவர்கள். தமிழரை எதிர்த்தோ அல்லது தமிழரை அணைத்தோ அல்லது தமிழர் மேல் கெந்திப் பாய்ந்தோ தமக்கு ஏற்படும் நெருக்கடிகளை தாண்டிவிடுவார்கள்.

ஒரு காலத்தில் ஆளும் கட்சி ஒரு நிலைப்பாட்டையும், எதிர்க்கட்சி அதற்கெதிரான நிலைப்பாட்டையும் எடுப்பதன் மூலம் இருபெரும் சிங்களக் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் தமிழ் மக்களின் உரிமைகளை பறித்தும், நசுக்கியும் வந்தன.

ஆனால் முள்ளிவாய்க்காலில் பாரதூரமான அளவு தமிழ்மக்கள் கொல்லப்பட்ட பின்னணியில் மனிதஉரிமை மீறல் மற்றும் போர்க்குற்றங்கள் இலங்கை அரசுக்கும், சிங்கள தலைவர்களுக்கும், அரச படையினருக்கும் எதிராக உள்நாட்டு ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் பெரும் நெருக்கடிகள் தோன்றியுள்ள பின்னணியில் மேற்படி சிங்களக் கட்சிகள் பின்வரும் உபாயத்தை வகுத்து செயற்பட்டு வருகின்றன.

அதாவது எதிரும் புதிருமாக நின்ற இரு பெரும் சிங்களக் கட்சிகளான சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்று சேர்ந்து தேசிய அரசாங்கத்தை அமைத்து அதன் மூலம் தமிழ் மக்களுக்கு நீதியும், அரசியல் தீர்வும் வழங்கப் போவதாக சர்வதேச அரங்கில் புதுவடிவம் எடுத்துள்ளனர்.

இங்கு சர்வதேச அரங்கில் தமக்குள்ள நெருக்கடியை களைவதற்காக “இரு கட்சிகள் ஒன்றுபட்டுள்ளன” என்பது ஒரு திட்டம். அதேவேளை இந்த அரசாங்கத்திற்கு கடிவாளம் இடுவதற்கும், தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான பரிகாரத்தை தடுப்பதற்கும் இன்னொரு வியூகமாக ஒரு கட்சி இரண்டாக காட்சியளிக்கிறது.

அதாவது ஒருபுறம் சுதந்திரக் கட்சி இரண்டாக காட்சியளிக்கிறது. மறுபுறம் சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்றாக காட்சியளித்து நெருக்கடிகளை கையாளுவதற்கான வெள்ளை முகம் போடுகின்றன.

இங்கு விசித்திரம் என்னவெனில் இரண்டு கட்சிகள் ஒன்றாகவும், ஒரு கட்சி இரண்டாகவும் ஒரே நேரத்தில் காட்சியளிக்கின்றன. அதேவேளை 16 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவரான ஆர்.சம்பந்தனை எதிர்க்கட்சித் தலைவராக்கியுள்ளனர்.

மறுவளமாக சுதந்திரக் கட்சியின் 50 உறுப்பினர்களுக்கு மேற்பட்டோர் கூட்டு எதிரணியினராக காட்சியளிக்கின்றனர். இங்கு 16 பேரைக் கொண்ட கட்சியின் தலைவர் எதிர்க்கட்சித்தலைவராகவும், 50 பேருக்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட அணியினர் பலம் வாய்ந்த கூட்டு எதிரணியினராகவும் உள்ளனர். இவை அனைத்துமே ஒரு Overall Strategy யின் பகுதிகளாகும்.

அதேவேளை வழமைப் போலவே தற்போதும் தமிழ்த் தலைமையிடம் ஒட்டுமொத்த வியூகம் (Overall Strategy) எதுவும் இல்லையென்பதுடன் தமிழ்த் தலைமையானது மேற்படி சிங்களத்

தலைவர்களின் ஓட்டு மொத்த வியூகத்தின் (Overall Strategy) ஒரு பகுதியாகவும் உள்ளதெனத் தெரிகிறது.

“வடக்கு-கிழக்கு இணைப்பு இல்லை”, அது இல்லை இது இல்லை என்று கோழி புல்லு கிள்ளிப் போடுமாப் போல் தமிழ் மக்களின் உரிமைப் பிரச்சனைகளை அணுக முடியாது.

சிங்களத் தலைவர்கள் பிரித்தானியாவின் இராஜதந்திர பாரம்பரியத்துடன் ஆங்காங்கே அடையாளம் காணப்படக்கூடியவர்கள். பல இடங்களில் அவர்களைவிடவும் அதிகம் மதிநுட்பம் வாய்ந்தவர்கள்.

1920ஆம் ஆண்டு பிரித்தானியாவில் நிகழ்ந்த பொதுத் தேர்தலில் அயர்லாந்திற்கு விடுதலை கோரியோர் போட்டியிட்டு பெரு வெற்றியீட்டியதும் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அவர்கள் குறிப்பிட்டிருந்தது போல இடைக்கால அரசாங்கத்தை அமைத்தனர்.

இவர்களுள் டி வலேரா விட்டுக் கொடுப்பற்ற முக்கிய தலைவராவார். அடுத்து மைக்கல் கொலின்ஸ், ஆதர் கிறிபித் ஆகிய இருவரும் மிதமான போக்கைக் கொண்டவர்கள். இவர்களை

பிரித்தானிய அரசாங்கம் அணைத்து பின்வருமாறு தனது சதித் திட்டத்தை நிறைவேற்றியது.

அயர்லாந்து விடுதலை தவிர்க்கப்பட முடியாதவாறு நிகழ்ந்தேறும் என்பது பிரித்தானிய ஆட்சியாளர்களுக்குத் தெரியும்.

ஆனால் அதேவேளை கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த அயர்லாந்தின் ஒரு பகுதியை தமது பிடிக்குள் வைத்திருக்கக்கூடிய ஒரு வாய்ப்பு இருந்ததை அவதானித்தனர்.

அதாவது 60 வீத புரோட்டஸ்தாந்து மதத்தினரையும், 40 வீத கத்தோலிக்கர்களையும் கொண்ட வட அயர்லாந்தை மதத்தின் பேரால் பிரிக்க முடியும் என்பதை கண்டு கொண்டனர்.

அயர்லாந்து மக்கள் கத்தோலிக்கர்கள். பிரித்தானியா தனது குடியேற்றத்தை அயர்லாந்தில் ஸ்தாபித்த பின்பு அங்கு புரோட்டஸ்தாந்து மதத்தை வடஅயர்லாந்தில் வெற்றிகரமாக பரப்பியது.

தற்போது புரோட்டஸ்தாந்து – கத்தோலிக்கம் என்ற மத அடிப்படையில் வடஅயர்லாந்தை அயர்லாந்திலிருந்து பிரித்து தென் அயர்லாந்திற்கு மட்டும் விடுதலை என்ற திட்டத்தை மைக்கல் கொலின்ஸ், ஆதர் கிறிபித் என்போரை அணைத்து நிறைவேற்றியது.

இத்தகைய பிரித்தாளும் தந்திரத்தின் ஒருபகுதியாக டி வலேரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்பு ஐஆர்ஏ இரண்டாக பிளவுண்டு தமக்குள் ஆயுத ரீதியாக அடிபட்டு ஆதர் கிறிபித் உட்பட பலர் மாண்டனர்.

அயர்லாந்தை இரண்டாக பிரிப்பதிலும் பிரித்தானிய ஆட்சியாளர்கள் வெற்றி பெற்றனர். ஐஆர்ஏ-யை இரண்டாக பிளந்து அடிபட்டு அழியவிடுவதிலும் வெற்றி பெற்றனர்.

வடஅயர்லாந்து இனி ஒருபோதும் தென் அயர்லாந்துடன் இணைய முடியாது. ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு வரலாறு இப்படி கடந்துவிட்டது என்பது கவனத்திற்குரியது.

பிரிக்கப்படாத அயர்லாந்தில் புரோட்டஸ்சாந்தினர் உரிய உரிமைகளுடன் வாழ வேண்டும் என்பதற்குப் பதிலாக 40 வீத கத்தோலிக்கர்களைக் கொண்ட வடஅயர்லாந்தையும் பிரித்தானியர் தம்முடன் இணைத்துக் கொண்டனர் என்பது கவனத்திற்குரியது.

மேற்படி இந்த அனுபவத்துடன் பொருந்திப் போகும் வகையில் சிங்களத் தலைவர்களின் இராஜதந்திர நகர்வுகள் உள்ளன. அயர்லாந்திலும் அதன் வடபகுதியான அல்ஸ்டரில் பிரித்தானியர் மேற்கொண்ட குடியேற்றத்தின் மூலமே அங்கு புரோட்டஸ்சாந்தினரை பெரும்பான்மையினராக்கினர்.

குடியேற்றம் என்பது ஒரு மூலோபாய திட்டமாக பிரித்தானியரிடம் இருந்தது.

தமிழ்-முஸ்லிம்களின் பகுதிகளில் இவ்வகையிற்தான் சிங்கள-பௌத்த குடியேற்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்பதை கவனித்தால் மேற்படி இரு வரலாற்று போக்குக்களும் ஒன்றுபட்டுப் போவதைக் காணலாம்.

ஒட்டுமொத்த வியூகமற்ற தமிழ் அரசியலை நினைத்தவாறு கையாளலாம் என்பது சிங்களத் தலைவர்களுக்கு புரியாத பாடமல்ல.