இந்தியாவின் பெங்களூரு நகரிலுள்ள வீடொன்றின் கழிவறையில் இரகசியமாக பதுக்கிவைக்கப்பட்டிருந்த 5.7 கோடி இந்திய ரூபா பெறுமதியான புதிய நாணயத்தாள்களை இந்திய வருமான வரித் திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
இந்தியாவில், 500 ரூபா மற்றும் 1000 ரூபா நாணயத்தாள்கள் செல்லுபடியாகாது என கடந்த மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அறிவித்ததனால், பழைய நாணயத்தாள்களை வங்கியில் கொடுத்து புதிய நாணயத் தாள்களைப் பெறுவதற்கு மக்கள் வரிசையில் காத்திருக்கின்றனர்.
இதேவேளை, கணக்குக் காட்டப்படாத கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்திருந்த பலரின் பாடு திண்டாட்டாமாகியுள்ளது.
இந்திய அதிகாரிகளின் முற்றுகைகளின் போது பல இடங்களில் பல கோடி ரூபா பழைய நாணயத்தாள்கள் கண்டுபிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு நகரில், கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட முற்றுகையின்போது 5.7 கோடி இந்திய ரூபா (சுமார் 12.6 கோடி இலங்கை ரூபா) பெறுமதியான நாணயத்தாள்கள் கழிவறையொன்றில் இரகசியமாக பதுக்கிவைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 2000 ரூபா இந்திய நாணயத்தாள்களாக இப்பணம் பதுக்கிவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
90 லட்சம் இந்திய ரூபா பெறுமதியான பழைய நாணயத்தாள்கள் மற்றும் 32 கிலோகிராம் தங்கப்பாடங்கள் ஆகியனவும் கைப்பற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.