பணத் தட்டுப்பாட்டால் டீ மட்டும் கொடுத்து திருமணம் நடத்திய குடும்பம்

உத்தரபிரதேச மாநிலம், கிரேட் நொய்டாவை அடுத்த நட்டோகி மதியா கிராமத்தை சேர்ந்தவர் மகவீர் சிங் மற்றும் அவரது மனைவி கியானோ. இவர்கள் தன்னுடைய மகளுடைய திருமணத்தை மிகவும் எளிமையான முறையில் நேற்று முன் தினம் இரவு நடத்தினர்.

மகாவீர் மற்றும் அவரது மனைவி இருவரும் மாற்றுத் திறனாளிகள். மத்திய அரசின் ரூ. 500 மற்றும் 1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை அடுத்து தம்பதிகள் மிகவும் கவலை அடைந்தனர். திருமணம் நடத்த அவர்களிடம் பணம் இல்லை.

பின்னர் குறிப்பிட்ட சிலரை மட்டும் அழைத்து திருமணத்தை நடத்த திட்டமிட்டனர். திருமண நிகழ்ச்சியில் விருந்தினர்களுக்கு வெறும் டீ மட்டுமே வழங்கப்பட்டது. மணப்பெண்ணும், மணமகனும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.

மணமகனுக்கு ஆசிர்வதிக்கும் போது மகாவீர் வெறும்  11 ரூபாய் மட்டுமே கொடுத்தார். இவர்களின் நிலைமையை பார்த்து கிராமத்தின் சில இளைஞர்கள் தங்கள் செலவில் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர்.

650 கோடி ரூபாய் செலவில் கர்நாடகாவில் பிரம்மாண்ட திருமணம் நடைபெறும் இதே நாட்டில் தான் வெறும் டீ மட்டும் வழங்கி திருமண நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.