அண்மைக்காலத்தில் பங்களாதேஷின் தேசிய மதமாக இஸ்லாம் மதம் பிரகடனப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் அங்குள்ள இந்துக்கள், முஸ்லிம்கள், பௌத்தர் மீது அதிகளவிலான தாக்குதல் மேற் கொள்ளப்பட்டு வருகின்றது.
குறிப்பாக பங்களாதேஷில் கடந்த 7 ஆண்டுகளில் இந்துக்கள் மீது 200க்கும் அதிகமான தாக்குதல்கள் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதல்களை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு பங்காளதேஷ் அரசை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா வலியுறுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனை வலியுறுத்தி வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகையின் முன்னர் நேற்று ஏராளமான இந்துக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், ஒபாமாவிடம் அவர்கள் அளித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,வங்காளதேசத்தில் இந்து கோயில்களும், இந்து மக்களின் சொத்துகளும் சூறையாடப்படுகின்றன.
இந்து மக்களுக்கு சொந்தமான நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன. இந்து பெண்களை கற்பழிப்பதும், இந்துக்களை கொல்வதும் அன்றாட நிகழ்வாகி விட்டது.
மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு பிரச்சனைகளுக்கு தீர்வு காணுவதோடு சிறுபான்மையின மக்களின்மீது கட்டவிழ்த்து விடப்படும் தீவிரவாதத்தை தடுத்து நிறுத்துமாறு அந்நாட்டு அரசை வலியுறுத்த வேண்டும்.
வருங்காள அதிபர் டிரம்ப் தலைமையிலான அரசும் எங்களை பாதுகாக்க முன்வர வேண்டும் என நீங்கள் அறிவுறுத்த வேண்டும் என அந்த மனுவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.