உணவில் தினமும் அப்பளம் சேர்த்துக் கொள்வது நல்லதா?

அப்பளம்! இது இல்லாத ஒரு மதிய உணவு ஒருபோதும் முழுமை பெறாது. அறுசுவை உணவாக இல்லாமல் போனாலும் கூட, அப்பளம் உடன் இருந்தால் அது சாம்பார், குழம்பு, ரசம் என எதுவாக இருந்தாலும் விரும்பி சாப்பிட்டுவிட முடியும்.

மதிய உணவின் ருசி, அதன் மீதான விருப்பத்தை அதிகரிக்கும் அப்பளம் கூட உடல்நலம் மற்றும் ஆரோக்கியத்தில் தாக்கத்தை உண்டாக்கும்.

சோடியம்:

அப்பளத்தில் அதிகமாக இருக்கும் முக்கிய பொருள் உப்பு. அப்பளத்தை தயாரிக்கவும், ருசி சேர்க்கவும் பயன்படும் பொருள் உப்பு. பொதுவாகவே இந்திய உணவுகளில் மசாலா பொருட்கள் மற்றும் உப்பு சேர்க்கப்படும். ஆனால், உடலில் இவை இரண்டுமே அளவுக்கு அதிகமாக சேர்வது நல்லதல்ல.

முக்கியமாக உப்பின் அளவு அளவுக்கு அதிகமாக சேரக் கூடாது. உடலில் / இரத்தத்தில் அளவுக்கு அதிகமாக உப்பு சேர்வது, இரத்த அழுத்தம், குமட்டல், தாகம், நீரிழிவு போன்றவை அதிகரிக்க காரணமாகும்.

மசாலா பப்பட்:

இன்று ருசி மற்றும் வட இந்திய கலப்பு உணவு முறையை பின்பற்றும் போது மசாலா கலப்பு உள்ள பப்பட் எனப்படும் அப்பள உணவுகளை நாம் சாப்பிடுகிறோம். மசாலா மற்றும் உப்பு ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாக உடலில் சேர்வது தவறு. இதன் காரணத்தால் அசிடிட்டி மற்றும் செரிமான கோளாறுகள் உண்டாகலாம்.

மலச்சிக்கல்:

அளவுக்கு அதிகமாக அப்பளம் சாப்பிடுவதால் உண்டாகும் அடுத்த பிரச்சனை மலச்சிக்கல். அப்பளம் வயிற்றில் இருந்து குடல் வரையில் செல்லும் வழியில் தாக்கம் உண்டாக்கி, வாயுத்தொல்லை மற்றும் மலச்சிக்கல் உண்டாக காரணியாக இருக்கிறது.

எண்ணெய் பயன்பாடு:

அதே போல அப்பளம் சமைக்கும் போது என்ன எண்ணெய் பயன்படுத்துகிறோம். அந்த எண்ணெயின் தரம் போன்றவற்றிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.தரமற்ற எண்ணெயில் அப்பளம் சமைத்து சாப்பிடுவது தீய கொலஸ்ட்ரால், இதய கோளாறுகள் மற்றும் நீரிழிவு போன்றவை உண்டாக காரணியாகலாம்.

சுகாதாரமற்ற முறை:

மற்ற உணவு பொருட்களை போல அப்பளத்தையும் சுகாதாரமாக வைத்து சமைக்க வேண்டும். சிலர் வீடுகளில் அப்பளத்தை மட்டும் திறந்த கவரில், சமையல் அறையில் ஏதோ ஒரு இடத்தில், அடுப்படியில் கீழே படும் நிலையில் வைத்து சமைத்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.