10 விக்கெட்டுகளுக்கு மேல் 7-வது முறையாக வீழ்த்திய அஸ்வின்

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 6 விக்கெட்டுகள் சாய்த்து மொத்தம் 12 விக்கெட்டுகளை அள்ளினார்.

* முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 2-வது இன்னிங்சிலும் 6 விக்கெட்டுகள் சாய்த்து மொத்தம் 12 விக்கெட்டுகளை அள்ளினார். 43-வது டெஸ்டில் ஆடிய அஸ்வின் டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியது இது 7-வது முறையாகும். இந்திய வீரர்களில் கும்பிளே 8 முறை 10 விக்கெட்டுகள் (132 டெஸ்ட்களில்) கைப்பற்றி முதலிடத்தில் உள்ளார். இங்கிலாந்து வீரர் சிட்னி பார்னஸ் (27 டெஸ்டில்), ஆஸ்திரேலிய வீரர் கிலாரி கிரிம்மெட் (37 டெஸ்டில்) ஆகியோர் மட்டுமே அஸ்வினை விட குறைந்த டெஸ்டில் ஆடி 7 முறை 10 விக்கெட்டுகளை சாய்த்துள்ளனர். அஸ்வினுக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலிய வீரர் டென்னிஸ் லிலே 58 டெஸ்ட் போட்டியில் இந்த அரிய இலக்கை எட்டி இருக்கிறார்.

* இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் நேற்று டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்சில் 24-வது முறையாக 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன் மூலம் கபில்தேவை (131 டெஸ்டில் ஆடி 23 இன்னிங்சில் 5 விக்கெட்) முந்திய அஸ்வின் டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்சில் அதிக முறை 5 விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர்கள் பட்டியலில் 3-வது இடத்தை பிடித்தார். கும்பிளே (132 டெஸ்டில் விளையாடி 35 முறை), ஹர்பஜன்சிங் (103 டெஸ்டில் விளையாடி 25 முறை) ஆகியோர் இந்த பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் உள்ளனர்.

* மும்பை டெஸ்ட் போட்டியில் அஸ்வின் 167 ரன்கள் விட்டுக்கொடுத்து 12 விக்கெட்டுகளை அள்ளினார். வான்கடே ஆடுகளத்தில் டெஸ்ட் போட்டியில் 2-வது சிறப்பான பந்து வீச்சு இதுவாகும். 1980-ம் ஆண்டு இந்த மைதானத்தில் இங்கிலாந்து வீரர் இயான் போத்தம் 106 ரன் கொடுத்து 13 விக்கெட்டுகள் வீழ்த்தியதே இங்கு சிறப்பான பந்து வீச்சாக உள்ளது.