குழந்தைகளின் உடல் நலத்தைக் கெடுக்கும் நூடுல்ஸ்

இன்றைய உலகம் குழந்தைகளுக்கானது என்று கூட சொல்லலாம். குழந்தைகள் எதை விரும்புகின்றனவோ அதுதான் இன்றைக்கு வெற்றி பெற்ற சந்தைப் பொருளாக இருக்கிறது. நிறைய குடும்பங்களில் பெற்றோர் இருவரும் சேர்ந்து ஒரு குழந்தைக்கு சம்பாதிக்கிறார்கள். அதனால் குழந்தைகள் விரும்புவது எளிதில் கிடைக்கிறது. இப்படி குழந்தைகளை மையமாக வைத்துதான் நூடுல்ஸ் பிரபலம் அடைந்தது.

சீனர்களின் பாரம்பரிய உணவான நூடுல்ஸ் இந்தியாவில் வந்தபோது யாரும் அதை கண்டுகொள்ளவில்லை. அதன்பின் மூக்கை துளைக்கும் நம்மூர் மசாலா அயிட்டங்களை அதில் சேர்த்தார்கள். வியாபாரம் சூடுபிடித்தது. இந்த மூக்கை துளைக்கும் வாசனையில்தான் நமது குழந்தைகளின் உடல் நலத்தைக் கெடுக்கும் சமாச்சாரங்கள் இருக்கின்றன. ‘மோனோ சோடியம் க்ளூடமேட்’ என்ற ரசாயனப் பொருள்தான் அந்த வாசனைக்கு காரணம்.

இந்த ரசாயனம் மூளையின் ஹைப்போதலாமஸ் வரை பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. சாதாரண வாந்தி, வயிற்று வலியில் தொடங்கி, அறிவாற்றலை சிதைப்பது வரை பல்வேறு பாதிப்புகளை உருவாக்கக்கூடியது என்று 1970 ஆம் ஆண்டில் வெளியான “திடேஸ்ட் தட் கில்” என்ற புத்தகத்திலேயே கூறப்பட்டுள்ளது. நூடுல்ஸ் மட்டுமல்ல, இன்றைய பாஸ்ட் புட் உணவகங்களிலும் சைனீஸ் உணவகங்களிலும் தயாரிக்கப்படும் பல உணவுப் பொருட்களில் இந்த ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது.

இந்த ரசாயனம் ஒன்றும் பெரிய அளவில் தீங்கு தருவதில்லை என்று வியாபாரிகள் தரப்பில் தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது. இதனால் ஒரு முடிவுக்கு வர முடியாத அமெரிக்க உணவுக் கட்டுப்பாட்டுத் துறை, குறைந்த அளவு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று ஒரு அளவை நிர்ணயித்தது. ஆனால், அதுவும் கெடுதல் தரும் என்பதால் இந்த ரசாயனம் கலக்கப்பட்டிருக்கிறது என்பதை பேக்கிங் அட்டை மீது போடவேண்டும் என்று எச்சரித்தது.

ஆனால் அமெரிக்காவில் மட்டும் இந்த ரசாயனத்தை குறைந்த அளவில் பயன்படுத்தும் தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் எல்லை மீறுகின்றன என்று உணவு நிபுணர்கள் சொல்கிறார்கள்.

எது எப்படியோ நம் குழந்தைகளுக்கு கெடுதல் தந்து அறிவை மந்தமாக்கும் இந்த ரசாயனம் கலந்த உணவுகளை தராமல் இருப்பதே அவர்களை சிறந்த மனிதர்களாக உருவாக்கும்.