கழுத்து வலி, தலைவலியை குணமாக்கும் மகா சிரசு முத்திரை

‘சிரசாசனம்’ என்பது தலைகீழாக நின்று செய்யும் ஆசனம். சிரசாசனம் செய்ய முடியாதவர்களுக்கு ‘மகா சிரசு முத்திரை’ நல்ல மாற்று. சிரசாசனம் செய்தால் என்னென்ன பலன்கள் கிடைக்குமோ, அவை அனைத்தும் இந்த முத்திரையைச் செய்வதால் கிடைக்கும். இது உச்சி முதல் கழுத்து, தோள்பட்டை வரை உள்ளஅனைத்துப் பகுதிகளுக்கும் ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி, அங்குள்ள சளி, நீர் ஆகியவற்றை வெளியேற்றும்.

செய்முறை :

மோதிர விரலை மடக்கி உள்ளங்கையின் நடுவில் வைத்து அழுத்த வேண்டும். ஆள்காட்டி விரல் நடுவிரல் நுனிகளை கட்டைவிரல் நுனியோடு சேர்த்து வைக்க வேண்டும். சுண்டு விரல் நீட்டி இருக்கவும்.

விரிப்பில் அமர்ந்து தலை, முதுகுத்தண்டு நிமிர்ந்த நிலையில் தரையில் சம்மணமிட்டு செய்ய வேண்டும். நாற்காலியில் அமர்ந்து பாதங்களை தரையில் பதித்தும் செய்யலாம்.

படுக்கையில் இருக்கும் நோயாளிகள் தலையணை வைத்து சாய்ந்த நிலையில் செய்யலாம்.

உயர் ரத்த அழுத்தம் பிரச்சனை உள்ளவர்கள் இதை தவிர்க்க வேண்டும்.

பலன்கள் :

நீர்கோத்தலால் ஏற்படும் தலைவலி, தலைபாரம், சளியால் ஏற்படும் தலைவலி, நெற்றிப்பொட்டில் ஏற்படும் வலி (Frontal sinusitis), மூக்குக்கு இருபுறமும் கண்களுக்குக் கீழே உள்ள எலும்புகளில் வரும் வலியை (Maxillaray sinusitis, Ethomoidal sinusitis) சரியாக்கும்.

மூக்கடைப்பு, மூக்கில் சதை வளர்தல், மூக்கில் நீர் வடிதல், ஒரு பக்க மூக்கில் மூச்சுவிடுதல், வாசனை உணராமல் போதல் பிரச்சனை உள்ளவர்கள் மூன்று மாதங்கள் தொடர்ந்து செய்துவந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

குனிந்து நிமிர்ந்து வேலை செய்வோர், இரு சக்கர வாகனம் ஓட்டுவோர், நீண்ட நேரம் குனிந்து படிக்கும் மாணவர்கள் ஆகியோருக்கு ஏற்படும் கழுத்து வலி சரியாகும். கழுத்து இறுக்கமும் நீங்கும்.

சிலருக்குக் கழுத்து எலும்பில் உள்ள சவ்வு பாதிக்கப்பட்டிருக்கும். இதனால் தோள்பட்டை, கை வரை வலி பாயும். இவர்களுக்கான பிரச்னையைத் தீர்க்கும் சிறந்த முத்திரை இது.