புகழ்பெற்ற ஆலயங்கள் நிறைந்த காஞ்சீபுரம்

ஏகாம்பரநாதர் கோவில் :

தமிழ்நாட்டின் கோவில் நகரம் என்று அழைக்கப்படுவது தஞ்சாவூர் மாவட்டம். மற்றொரு கோவில் நகரமும் தமிழகத்தில் இருக்கிறது. அது காஞ்சீபுரம். இங்கும் பரவலாக ஆலயங்கள் அமைந்துள்ளன. இந்தப் பகுதியில் புகழ்பெற்ற ஆலயங்கள் மட்டுமே 200-யை எட்டும் என்பது வியப்பூட்டும் தகவலாகும். இவற்றில் இருந்தும் சிறப்பு வாய்ந்த 4 ஆலயங்கள் காஞ்சீபுரத்தில் இருக்கின்றன. அவை காஞ்சி காமாட்சியம்மன் கோவில், ஏகாம்பரநாதர் திருக்கோவில், வரதராஜப் பெருமாள் ஆலயம் மற்றும் கயிலாசநாதர் கோவில்.

காஞ்சி காமாட்சியம்மன் கோவில் :

அம்மன் ஆலயங்களிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்த கோவில் இது. இந்தக் கோவிலை ஆதிசங்கரர் 8-ம் நூற்றாண்டில் கட்டியதாக வரலாறுகள் கூறுகின்றன. காமாட்சி அம்மன் ஒரு கையில் கரும்பையும், மற்றொரு கையில் கிளியையும் ஏந்தி, பத்மாசனத்தில் வீற்றிருப்பாள். அவளது உக்கிரத்தை தணித்தவர்தான் ஆதிசங்கரர். இந்தக் கோவிலின் உட்பிரகாரத்தில் தெப்பக்குளமும், 100 கால் மண்டபமும் உள்ளன. வெளிப்பிரகாரத்தில் இருந்து பார்த்தால், தங்கத்தால் வேயப்பட்ட கோபுர விமானம் மின்னும்.

ஏகாம்பரநாதர் கோவில் :

விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயர் காலத்தைச் சேர்ந்த கோபுரம், இந்தக் கோவிலில் உள்ளது. பஞ்சபூத தலங்களில் ஒன்று. இரண்டாம் நரசிம்மவர்ம பல்லவனால் கட்டப்பட்ட கயிலாசநாதர் கோவிலுக்கு பிற்பட்டது இந்த ஆலயம். இங்கு காணப்படும் மற்றொரு அதிசயம் 3,500 ஆண்டுகளுக்கு முந்தைய மாமரம். இந்தக் கோவிலில் 1008 சிறிய சிவலிங்கங்களுடன் உள்ள பெரிய சிவலிங்கம் ஒன்று காண்பவர்களை வியக்க வைக்கிறது. மேலும் பல்வேறு வடிவங்களில் சிவலிங்கங்கள் கோவிலைச் சுற்றிலும் வைக்கப்பட்டுள்ளன.

வரதராஜப் பெருமாள் கோவில் :

இது வைணவத் திருத்தலங்களில் ஒன்று. பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் 31-வது திவ்ய தேசம் இது. முதலாம் குலோத்துங்கச் சோழனும், விக்கிரம சோழனும் இந்தக் கோவிலை விரிவுபடுத்தியுள்ளனர். அவர்களுக்குப் பிறகு, விஜய நகர அரசர்கள் கிழக்கு கோபுரம், ஊஞ்சல் மண்டபம், கல்யாண மண்டபம் ஆகியவற்றைக் கட்டினர்.

கல்யாண மண்டபம் 8 வரிசைகளைக் கொண்டது. ஒவ்வொரு வரிசையிலும் 12 தூண்கள் உள்ளன. அவற்றில் 96 சிற்பக்கலைகள் இடம்பெற்றுள்ளன. ஒரே கல்லால் ஆன தூண்களில் அழகிய வேலைப்பாடுகள் காணப்படுகின்றன. யாளி, போர்குதிரை, குதிரை மீது வீரர்கள், பல்வகை சிற்பங்கள் இந்தத் தூண்களை அலங்கரிக்கின்றன. மற்றொரு அதிசயம் 100 கால் மண்டபம்.

இந்த மண்டபத்தின் நான்கு முனைகளிலும் கல்லால் ஆன சங்கிலிகள் தொங்க விடப்பட்டுள்ளன. கிழக்குக் கோபுரம் 9 நிலைகள் கொண்டு, 180 அடி உயரத்துடன் காணப்படுகிறது. இந்தக் கோவிலில் தங்கப் பல்லி ஒன்று அச்சு அசலாக பல்லியைப் போன்றே சுவரின் மேற்புறத்தில் ஒட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பல்லியைத் தரிசிப்பவர்களுக்கு பல்லி சம்பந்தமான அனைத்து தோஷங்களும் நீங்குகின்றன என்பது பக்தர்களின் ஐதீகம்.

கயிலாசநாதர் கோவில் :

‘தென்திசை கயிலாயம்’ என்று அழைக்கப்படும் சிறப்புடையது இந்தக் கோவில். பல்லவ மன்னன் ராஜசிம்மன் கட்டிய அழகிய சிற்பங்கள் இக்கோவிலுக்கு மேலும் பெருமை சேர்க்கின்றன. இந்தக் கோவிலில் உள்ள கயிலாசநாதரைத் தரிசித்து விட்டு வருவதே விசேஷம்தான்.

கயிலாசநாதரைத் தரிசித்த பின்னர், அதன் உட்பிரகாரத்தை வலம் வருவதற்கான நுழைவாயில் குகையைப் போன்ற குறுகலான அளவில் உள்ளது. நுழைந்து உட் பிரகாரத்தைச் சுற்றிவிட்டு வெளியே வரும்போது அதன் வெளிவாயிலும் குகை போன்று தரையோடு தரையாக ஒட்டியுள்ளது. ‘வாழ்க்கையில் எத்தகைய இடையூறுகள் நேர்ந்தாலும் சமாளிக்க வேண்டும்’ என்பதையே இந்த அமைப்பு காட்டுவதாக சொல்கிறார்கள்.