ஜெயலலிதாவின் சிகிச்சை தொடர்பான ஆவணங்கள் திருட்டு? அப்பல்லோ மருத்துவமனையில் ஹேக்கர்கள் கைவரிசை

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்பல்லோ மருத்துவ குழுமத்தின் சர்வர்களை Legion என்ற ஹேக்கர்கள் குழு ஊடுருவி தகவல்களை திருடியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் அலுவலகத்தின் டுவிட்டர் பக்கம், அந்த கட்சி துணைத்தலைவர் ராகுல் காந்தி, தொழிலதிபர் விஜய் மல்லையா, என்டிடிவின் ஊடகவியலாளர்களான ரவிஸ் குமார் மற்றும் பரக்கா தத் ஆகியோரது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கங்களை Legion என்ற ஹேக்கர்கள் குழுவானது ஊடுருவி குறித்த நபர்களின் தகவலை வெளியிட்டுள்ளனர்.

இதுகுறித்து, வாசிங்டன் போஸ்ட் மற்றும் பேக்டரி டெய்லி ஆகிய ஊடகங்களுக்கு Legion என்ற ஹேக்கர்கள் குழுவின் உறுப்பினர் ஒருவர் குறித்த டுவிட்டர் பக்கங்களை முடக்கியது தாங்கள் தான் என்றும் பேட்டியளித்துள்ளார்.

மேலும் குறித்த ஹேக்கர்கள் தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவந்த அப்பல்லோ மருத்துவமனை குழுமத்தின் சர்வர்களிலுள்ள தகவல்களையும் திருடியுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

தாங்கள் ஊடுருவி பெற்றுக்கொண்ட எல்லா தகவல்களையும் வெளியிட்டால் இந்தியாவில் குழப்பம் ஏற்படும் என்பதால் அவற்றை வெளியிடாமல் தவிர்த்துள்ளோம் என்று Legion என்ற ஹேக்கர்கள் குழுவின் உறுப்பினர் ஒருவர் வாஸ்சிங்டன் போஸ்ட் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த ஹேக்கர்களுடைய அடுத்த குறி இந்திய அரசின் மின்னஞ்சல் சேவையை வழங்கக்கூடிய sansad.nic.in என்ற சர்வர் தான் என்று அந்த ஹேக்கர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.