சர்வதேச ரீதியில் இராணுவத்தின் நன்மதிப்பை பெற்றுக்கொள்வதில் நெருக்கடியான நிலை காணப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
போர்க்குற்றம் ஐக்கிய நாடுகள் சபையன் குற்றச்சாட்டு மற்றும் யோசனைகளுக்கு மத்தியில் சர்வதேசத்தின் ஆதரவை பெற்றுக் கொள்ளாமல், இராணுவத்தினரின் மரியாதையை பாதுகாப்பது கடினமான விடயம் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
சப்புக்ஸ்கந்த மாகொல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவிய பயங்கரவாதத்தை தோற்கடித்த இராணுவத்தினர், சர்வதேச மட்டத்திலும் வெற்றி பெறுவது அவசியமாகும்.
மனித உரிமை மீறல் தொடர்பிலான குற்றச்சாட்டு மற்றும் யோசனை தொடர்பில் இராணுவத்தினரின் கௌரவம் மற்றும் நாட்டு மக்களின் கௌரவத்தை பாதுகாத்துக் கொண்டு அந்த சவால்களை வெற்றி கொள்வது அவசியம் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா. அமைதிப் படையில் இணைந்து பணியாற்றும் போது, சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக அரசாங்கத்தினால் சட்டநடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.
இது தொடர்பில் இலங்கை அதிகாரிகள் மீண்டும் ஒரு முறை ஐக்கிய நாடுகள் அமைப்பினரிடம் கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ள நிலையில் ஜனாதிபதி இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.
ஹைய்டியில் ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையில் இணைந்திருந்த 114 இலங்கை இராணுவத்தினர், சிறுவர்கள் உட்பட பெண்களுக்கு எதிராக மேற்கொண்டதாக கூறப்படும் பாலியல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 2007ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
இது தொடர்பில் பொறுப்பு கூற வேண்டியவர்களுக்கு குற்ற சட்டத்தின் கீழ் தண்டனை வழங்குமாறும், எதிர்காலத்தில் அமைதிகாக்கும் நடவடிக்கைகளுக்காக அனுப்புவதற்கு முன்னர் அந்த அதிகாரிகள் உட்பட இராணுவத்தினரை முழுமையான சோதனைக்கு உட்படுத்துமாறும் ஜெனிவா நகரத்தில் கூடிய சித்திரவதைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் குழுவினால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.