சபரிமலை ஐயப்பன் பற்றிய சிறப்பு தகவல்கள்

ஐயப்பன் 18 படி தெய்வங்கள் :

1. விநாயகர்
2. சிவன்
3. பார்வதி
4. முருகன்
5. பிரம்மா
6. விஷ்ணு
7. ரங்கநாதன்
8. காளி
9. எமன்
10. சூரியன்
11. சந்திரன்
12. செவ்வாய்
13. புதன்
14. குரு
15. சுக்கிரன்
16. சனி
17. ராகு
18. கேது

வன சக்கரவர்த்தி :

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அடுத்து பிரசித்தி பெற்ற தலம் அச்சன்கோவில். சிறுவனாக குளத்துப்புழையில் வளர்ந்த சாஸ்தா இளைஞர் பருவத்தில் இத்தலத்தில் வசித்ததாக வரலாறு. இங்கு சாஸ்தா வனத்தை காக்கும் அரசராக பூரணா, புஷ்கலை தேவியருடன் இருக்கிறார். பரசுராமர் கட்டிய இக்கோயிலில் அவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மூலவர் அருளுவது விசேஷம்.

இங்கு மார்கழி மாதம் முதல் நாளில் இருந்து பத்து நாள் திருவிழா சிறப்பாக நடக்கிறது. பிற ஐயப்பன் கோயில்களில் இல்லாத சிறப்பாக இத்திருவிழாவின் போது தேரோட்டம் நடத்தப்படுகிறது. விஷப்பூச்சிகளால் கடிபட்டவர்கள் மூலவரின் மேனியில் பூசியிருக்கும் சந்தனத்தை தேய்த்துக்கொண்டால் விஷம் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை.

நாகராஜா, நாகயட்சி :

ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் நீராட அமைக்கப்பட்டுள்ள பஸ்மக்குளத்திற்கு வடக்கே நாகராஜாவையும், நாகயட்சியையும் பிரதிஷ்டை செய்துள்ளனர். இங்கே சர்ப்ப பாட்டு பாடப்படும். குழந்தை இல்லாத பக்தர்கள், சர்ப்ப பாட்டு வழிபாட்டில் கலந்து கொண்டால் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை. நாகயட்சிக்கு பட்டுப்புடவை, பூ, குங்குமம் ஆகியவற்றை வழிபாட்டு பொருட்களாக கொடுக்கலாம். நாகராஜாவிற்கு மஞ்சள் பொடி, கற்பூரம் வழங்கலாம்.

மாளிகை புறத்தம்மைக்கும் திருவாபரணம் :

சபரிமலையில் ஐயப்பனுக்கு மட்டுமின்றி மாளிகைப்புறத்தம்மனுக்கும் ஆபரணங்கள் கொண்டு வரப்படுகின்றன. இதையும் தனியாக ஒரு பெட்டியில் வைத்து கொண்டு வருகிறார்கள். ஐயப்பனுக்கு திருவாபரணம் சார்த்தப்பட்டு பூஜை நடக்கும் போது மாளிகை புறத்தம்மனுக்கும் பூஜை நடத்தப்படும். மகர ஜோதி முடிந்த பிறகும் ஆறு நாட்கள் நடை திறக்கப்பட்டிருக்கும். இந்த ஆறு நாட்களிலும் நடக்கும் விழாவின் நாயகி மாளிகைபுறத்தம்மன் தான். ஐயப்பனை திருமணம் செய்ய வேண்டும் என்ற ஆவலில் இங்கு அருள்பாலிப்பதாக ஐதீகம்.

பரிசோதகர்:

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் வழியில் வாபர் எனும் இஸ்லாமியர் ஒருவர் வசித்து வந்தார். கொள்ளைத் தொழிலில் ஈடுபட்டிருந்த அவர் சபரிமலைக்கு செல்லும் பக்தர்களிடம் இருந்து வழிப்பறி செய்து அதனை ஏழைகளுக்கு கொடுத்தார். அப்பகுதியை ஆண்ட அரசரால் அவரை பிடிக்கமுடியாததால், வாபரின் செயலுக்கு முடிவு கட்டும்படி ஐயப்பனிடம் வேண்டிக் கொண்டார். பாலகனாக இருந்த ஐயப்பனின் பேச்சை வாபர் கேட்பதாக இல்லை. எனவே அவரை வதம் செய்ய சென்றார் ஐயப்பன். அவரிடம் வாபர், “என்னைக் கொன்றால் என்னை நம்பியிருக்கும் மக்களுக்கு யார் ஆதரவு?’ என்றார். அவர்களை தான் பார்த்துக் கொள்வதாக கூறிய ஐயப்பன், அவருக்கு பரிசோதிக்கும் பணியையும் கொடுத்தார்.

சபரிமலை செல்லும் வழியில் ஒரு பள்ளிவாசல் உள்ளது. பக்தர்கள் இங்கு சென்று தாங்கள் விரதத்தையும், பிரம்மச்சர்யத்தையும் முழுமையாக கடைப்பிடித்தோம் என்று உறுதி செய்துவிட்டுத்தான் சபரிமலைக்கு செல்லவேண்டும் என்பது ஐதீகம். இங்கு விபூதியை பிரசாதமாக தருவது சிறப்பு.

மனைவியை பிரிந்த சாஸ்தா :

ஆரியங்காவில் இருந்து 20 கி.மீ., தூரத்தில் உள்ளது மாம்பழத்துறை தலம். புஷ்கலையை மணம் முடித்த சாஸ்தா தனது தொழிலுக்கு அவள் தொந்தரவாக இருந்து விடக்கூடாது என்பதற்காக இத்தலத்தில் தங்கும்படி செய்தார். இங்கு புஷ்கலை தேவி, “பகவதி’ அம்மனாக “பத்திரகாளி’ வடிவத்தில் அருளுகிறாள்.

பம்பா தர்ப்பணம் :

பம்பையில் பக்தர்கள் தர்ப்பணம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. இருப்பினும் ராமபிரான் தனது தந்தைக்காகவும், மூதாதையர்களுக்காகவும் பம்பைக்கரையில் தர்ப்பணம் செய்ததை அடிப்படையாக கொண்டே இப்போதும் பக்தர்கள் தங்களது மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். சபரி அன்னையை பார்ப்பதற்காக ராமன் இங்கு வந்தார். வரும் வழியில் பம்பையில் தர்ப்பணம் செய்தார் என புராணங்கள் கூறுகின்றன.

ஐயப்பனின் சின்முத்திரை :

பரசுராமர் தர்மசாஸ்தாவின் கோயிலை சபரிமலையில் அமைத்தார். அப்போது மேற்கூரையோ, சுற்றுப்புற சுவர்களோ இல்லை. சாஸ்தாவின் சிலையை மட்டுமே பிரதிஷ்டை செய்தார். இதன்பிறகு மறு அவதாரம் எடுத்த தர்மசாஸ்தா பூமியில் ஐயப்பன் என்ற பெயரில் வளர்ந்து, தர்மசாஸ்தாவின் விக்கிரகத்தில் ஐக்கியமாக தவம் செய்தார்.

அப்போது சின்முத்திரையுடன் அமர்ந்தார். ஆத்மா, பரமாத்மாவுடன் இணைவதை சுட்டிக்காட்டுவதே சின்முத்திரையின் தத்துவமாகும்.

ஆரம்பகால பூஜை :

ஒரு காலத்தில் சபரிமலையில் தர்மசாஸ்தாவுக்கு ஆண்டுக்கு ஒரு முறை ஒரே ஒரு நாள் மகரஜோதி அன்று மட்டும்தான் பூஜை நடந்தது. நிலக்கல் என்ற இடத்திலிருந்து பக்தர்கள் சென்று பூஜை நடத்தி வந்துள்ளனர்.

ஐயப்பன் தர்மசாஸ்தாவிடம் ஐக்கியமான பிறகுதான் மண்டல பூஜை, மகரவிளக்கு, மாத பூஜை என படிப்படியாக பூஜைகள் பெருகின. தர்மசாஸ்தா வேறு, ஐயப்பன் வேறு என்பதை இந்த தகவல் தெரிவிக்கிறது.

பாதுகாப்பாக வரும் கருடன் :

ஐயப்பனின் வளர்ப்புத்தந்தை பந்தள மகாராஜா ராஜசேகரன் ஐயப்பனை பிரியும் காலம் வந்தது. மணிகண்டன் அவரிடம், “”நான் காட்டுக்குள் குடியிருக்க போகிறேன். என்னைக் காணவேண்டுமானால் நீங்கள் மலைகளைக் கடந்து வரவேண்டும். அது சாதாரண மலையல்ல. ஏற்ற இறக்கமும், கல்லும் முள்ளும் கொண்டதாக இருக்கும்” என்றார்.

“அப்படியானால் நான் உன்னை எப்படி காணவருவேன்’ என மகாராஜா கேட்டார். அதற்கு மணிகண்டன், “நீங்கள் வரும்போது உங்களுக்கு ஒரு கருடன் வழிகாட்டுவான். அந்த வழிகாட்டுதலின்படி நீங்கள் எனது இடத்திற்கு வந்துவிடலாம்’ என அருள்பாலித்தார். அதன்படி பல இடங்களில் ஏற முடியாமல் ஆங்காங்கே அமர்ந்துவிடுவார். ஐயோ! அப்பா! என அவர் அடிக்கடி சொல்வார். இந்த சொற்களே திரிந்து “ஐயப்பன்’ என ஆகிவிட்டதாக சொல்லப்படுவதுண்டு. இப்போதும் ஐயப்பனுக்கு பந்தளம் அரண்மனையிலிருந்து நகைகளை எடுத்துச் செல்லும்போது கருடன் நகைப்பெட்டிகளுக்கு பாதுகாப்பாக வருவது விசேஷ அம்சமாகும்.

பம்பா தர்ப்பணம் :

பம்பையில் பக்தர்கள் தர்ப்பணம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. இருப்பினும் ராமபிரான் தனது தந்தைக்காகவும், மூதாதையர்களுக்காகவும் பம்பைக்கரையில் தர்ப்பணம் செய்ததை அடிப் படையாக கொண்டே இப்போதும் பக்தர்கள் தங்களது மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். சபரி அன்னையை பார்ப்பதற்காக ராமன் இங்கு வந்தார். வரும் வழியில் பம்பையில் தர்ப்பணம் செய்தார்.

பந்தளம் அரண்மனை உருவான ஆண்டு :

பாண்டிய நாட்டு மன்னர் ஒருவரை அவரதுமந்திரி சூழ்ச்சி செய்து கொல்ல முயன்றார். அவர் மதுரையிலிருந்து தப்பிச் சென்று கேரளத்தை அடைந்தார். பல ஆண்டுகளுக்கு பின் பந்தளத்தில் ஒரு இடம் வாங்கி, ஒரு அரண்மனையை அமைத்தார். கி.பி.903ல் இந்த அரண்மனை உருவாக்கப்பட்டிருக்கலாம் என தெரிய வருகிறது. பின்னால் வந்த மற்ற மன்னர்கள், அரண்மனையை மட்டுமின்றி தேசத்தையும் விரிவுபடுத்தினர்.

பஸ்மக்குள தீர்த்தம் :

ஐயப்பன் கோயிலில் புண்ணிய தீர்த்தமாக கருதப்படுவது பஸ்மக்குளம். ஒரு காலத்தில் இக்குளத்து நீர் தேங்காய் தண்ணீரை விட சுவையாக இருந்தது. இதில் பார்வை பட்டாலே பாவங்கள் பறந்தோடும் என்பது நம்பிக்கை. கூட்டம்
அதிகமான பிறகு, இதன் பெருமை தெரியாமல் பக்தர்கள் இதன் கரையை கழிவறையாக்கி விட்டனர். தற்போது இக்குளம் ஓரளவு சீரமைக்கப்படிருக்கிறது. பக்தர்கள் தயவு செய்து இக்குளத்தை பாழ்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இக்குளத்தை தூரெடுத்து, தலையில் தண்ணீர் எடுத்து தெளிக்கும் அளவுக்கு மட்டும் வழிகளை அடைத்து விட்டால், இதன் பழம்பெருமை பாதுகாக்கப்படும்.

தியானத்தில் கவனம் :

ஐயப்பன் சபரிமலையில் குத்துக்காலிட்டு அமர்ந்துள்ளார். சபரிமலையில் ஐயப்பன் தவமிருக்கும்போது தனது வஸ்திரத்தை முழங்காலை சுற்றி கட்டிக்கொண்டு அமர்ந்தார். தியானத்தில் இருக்கும்போது தன்னை வளர்த்த தந்தை வந்தால்கூட தியானத்திலிருந்து எழக்கூடாது என்ற நோக்கத்திலேயே எழ முடியாத நிலையில் குத்துக் காலிட்டு அமர்ந்துள்ளார் என்று சொல்வதுண்டு.

படிப்பு தரும் குட்டி சாஸ்தா :

கேரளாவில் குளத்துப்புழை என்ற இடத்தில் சாஸ்தா கோயில் உள்ளது. இங்கு சாஸ்தா, குழந்தை வடிவில் இருக்கிறார். கருவறை நுழைவு வாயில் சிறுவர்கள் புகும் அளவிற்கு உயரம் குறைந்து உள்ளது. செங்கோட்டையில் இருந்து 50 கி.மீ., தூரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. விஜயதசமி தினத்தன்று இங்கு “வித்தியாரம்பம்’ எனும் நிகழ்ச்சி விமரிசையாக நடக்கிறது. இந்நாளில் பள்ளியில் புதிதாக சேரவிருக்கும்

குழந்தைகளுக்கு எழுத்து பயிற்சி தரப்படும். குழந்தைகளின் படிப்பு சிறப்பாக அமைந்திட “குட்டி சாஸ்தா’ அருள்புரிவார் என்பது நம்பிக்கை.

மாலை அணிந்து விரதமிருப்பவர்கள் தினமும் காலை, மாலையில் நீராடி விட்டு ஐயப்பனின் 108 சரணக்கோவையை மனதில் பயபக்தியுடன் பாடவேண்டும். இதனை மிகவும்

மாப்பிள்ளை ஐயப்பன் :

சபரிமலையில் பிரம்மச்சரியம் காக்கும் சாஸ்தா கிரகஸ்த (குடும்பம்) நிலையில் ஆரியங்காவில் இருக்கிறார். செங்கோட்டையில் இருந்து 20 கி.மீ., தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது. இங்கு சாஸ்தா, புஷ்கலாதேவியுடன் மாப்பிள்ளை கோலத்தில் காட்சி தருகிறார். சவுராஷ்டிரா இன மக்களின் குல தெய்வமான புஷ்கலாவின் இங்கே சாஸ்தாவுடன் ஐக்கியமானார். அவரை சாஸ்தா திருமணம் செய்யும் காட்சியை ஒவ்வொரு டிசம்பர் மாதமும் இங்கு நடத்துவர். மதம் கொண்ட யானையை அடக்கி அதன் மேல் அமர்ந்த கோலத்தில் இங்கு சாஸ்தா இருப்பதால் “மதகஜ வாகன ரூபன்’ என்றொரு பெயரும் உண்டு. இவரை வணங்கினால் தடைபட்ட திருமணங்கள் விரைந்து நடக்கும் என்பது நம்பிக்கை.

ஐயப்பன் கோயிலில் தீப வழிபாடு :

கோயம்புத்தூர் சித்தாபுதூரில் ஐயப்பன் கோயில் உள்ளது. சபரிமலை கோயில் போலவே கட்டப்பட்டிருப்பதும், அங்கு நடக்கும் பூஜை முறைகளைப் போலவே பூஜைகள் செய்வதும் இத்தலத்தின் சிறப்பு. நம்பூதிரிகளே இங்கு பூஜைகளை செய்கின்றனர். பிரகாரத்தில் நெய்தீப மேடை உள்ளது. ஐயப்பனிடம் வேண்டிக்கொண்டு இங்கு தீபங்கள் ஏற்றி வழிபட்டால் தீமைகள் விலகி நன்மைகள் உண்டாகும் என்பது நம்பிக்கை. குருவாயூரப்பன், பகவதிதேவி, பிரம்மரக்ஷி, ஆஞ்சநேயர் ஆகியோருக்கு சன்னதி உள்ளது.

சென்னை ஐயப்பன் :

சென்னை பாரிமுனை அரண்மனைக் கார தெருவில் உள்ள கச்சாலீஸ்வரர் கோயிலில் ஐயப்பனுக்கு சன்னதி உள்ளது.
சபரிமலை கோயிலுக்கு தமிழகத்தில் இருந்து ஐயப்பன் சிலை கொண்டு செல்லப்பட்ட போது அவரை சில தலங்களில் வைத்து பூஜை செய்தனர். இங்கு பூஜை செய்தபோது மூன்று நாட்கள் வரையில் சிலையை எடுத்துச் செல்ல சுவாமியின் உத்தரவு கிடைக்கவில்லை. இதன் பிறகே எடுத்துச் சென்றனர். சபரிமலை ஐயப்பன் இங்கிருந்ததை நினைவூட்ட, தனியாக சன்னதி அமைக்கப் பட்டது. சபரிமலையில் நடப்பது போலவே இவருக்கு பூஜைமுறை கடைபிடிக்கப்படுகின்றன. மகரஜோதி விழாவும் நடத்தப்படுகிறது.

வில்வ இலை அபிஷேகம் :

சிவ, விஷ்ணுவின் மைந்தனாக பிறந்த ஐயப்பன் கிராமங்களில் அய்யனாராக அருள்புரிகிறார். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில், மோகினியாக இருந்து தன்னைப் பெற்ற பெருமாளின் பெயரையும் சேர்த்து “சேவுகபெருமாள் அய்யனார்’ என்றழைக்கப்படுகிறார். அத்துடன் தனது தந்தை சிவனுக்கு உகந்த வில்வ இலையை பூஜிக்கும் பேறு பெற்றவராக இருக்கிறார். மகுடம், பட்டைகள் அணிந்து வீராசனத்தில் அமர்ந்து பூர்ண புஷ்கலா தேவியுடன் காட்சி தருகிறார். சிவன் சுயம்பு மூர்த்தியாக பூவைவல்லி அம்பாளுடன் அருள் பாலிக்கிறார். தந்தையும், மகனும் ஒரே இடத்தில் தரிசனம் தரும் அற்புத தலம் இது.