கர்ப்ப காலத்தில் களைப்பு ஏற்படுவதை தவிர்க்க சில முக்கிய ஆலோசனைகள்!

கர்ப்பக் காலத்தில் முதல் மூன்று மாதங்கள் வரை இவ்வாறு களைப்பு ஏற்படுவது இயல்பு. இந்தக் காலக்கட்டத்தில் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களுக்கு ஏற்ப தன்னைப் பழக்கிக் கொள்ள உடலுக்கு அவகாசம் தேவைப்படும்.

பன்னிரண்டாம் வாரம் வரை ஹார்மோன் மாற்றங்கள் தொடரும். கர்ப்பக் காலம் முழுவதிலும் கர்ப்பிணிக்கு களைப்பு ஏற்பட்டு அடிக்கடி சோர்ந்துவிடக் கூடும். குறிப்பாக நிறை மாதத்தின் போது களைப்பு அதிகரிக்கும்.

இளஞ்சிறார்களை உடையவர்களுக்கும், களைப்பைத் தரும் வேலையில் இருப்பவர்களுக்கும் இந்தச் சூழலைக் கையாள்வது மிகவும் சிரமமான ஒன்றாகும்.

கர்ப்பிணிகள் பகலில் இரண்டு மணி நேரமாவது முழு அளவில் ஓய்வெடுக்க வேண்டும். நாளொன்றுக்குப் பத்துமணி நேரம் உறங்கி, எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஓய்வெடுத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.

சில சமயம் மனக் கவலையால் சோர்வு வந்துவிடும். நீங்கள் எதைப் பற்றியாவது கவலைப்படுவதாக இருந்தால், அதைப்பற்றி உங்கள் கணவர், மருத்துவர் அல்லது நண்பருடன் மனம் திறந்து பேசுவது பயனுள்ளதாக இருக்கும்.