சபரிமலையில் பக்தர்களுக்கான விஷேட ஏற்பாடுகள்…! 40 இடங்களில் மூலிகை குடிநீர்

சபரிமலைக்கு செல்பவர்கள் பிளாஸ்டிக் போத்தல்களை கொண்டு செல்வதற்கு கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளமையினால் , சபரிமலை ஐயப்பன் கோயிலில் விநியோகிக்கப்பட்டு வந்த பிளாஸ்டிக் குடிநீர் போத்தல் விற்பனை முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

இதனால், பக்கதர்கள் பாரிய அசௌகரியங்களை எதிர் கொள்ள வேண்டி வரும் என்பதால் பக்தர்களுக்குத் தடையின்றி குடிநீர் கிடைக்கும் வகையில், கேரள குடிநீர் திணைக்களத்தினால் விஷேட வழிமுறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக பக்கர்கள் வரும் பாதைகளில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைத்து குழாய்கள் மூலம் பக்தர்களுக்கு குடிநீர் வழங்க ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சுக்கு, பதிமுகம், ராமிச்சம் வேர் ஆகிய பொருட்களுடன் தண்ணீர் கொதிக்க வைத்து மூலிகை குடிநீர் வழங்குவது வழக்கம். அதன்படி, பம்பை முதல் சந்நிதானம் வரை இதுவரை 30 இடங்களில் மூலிகை குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், மேலும் 10 இடங்களில் இந்த மூலிகை குடிநீர் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால், பம்பை முதல் சந்நிதானம் வரை சுமார் 40 இடங்களில் மூலிகை குடிநீர் பக்தர்களுக்கு இலவசமாக வழங்குவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.