நடராஜனுக்கு போயஸ் கார்டனுக்குள் நுழைய சசிகலா தடை விதித்திருப்பது ஏன்?

ஜெயலலிதா வாழ்ந்து மறைந்த போயஸ் கார்டன் இல்லத்திற்குள் நுழைவதற்கு கணவர் நடராஜன், சொந்தங்களுக்கு இன்னமும் சசிகலா அனுமதி தரவில்லை என கூறப்படுகிறது.

ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அவர் வகித்து வந்த அதிமுக பொதுச் செயலாளர் பதவியை கைப்பற்ற சசிகலா தரப்பு வியூகம் வகுத்து தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கட்சியின் மூத்த நிர்வாகிகள், அதிமுக அமைச்சர்கள், மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் என கிட்டதட்ட நிர்வாகிகளில் பெரும்பாலானோர் ஆதரவு சசிகலாவுக்கு கிடைத்துவிட்டது. இருப்பினும் தொண்டர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே நடராஜன் பெயர் வந்துவிடக்கூடாது என்பதில் சசிகலா மிகவும் எச்சரிக்கையாக உள்ளார்.

அதனால் தான் ஜெயலலிதா உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்த போது சசிகலாவின் ஒட்டுமொத்த குடும்பமே ‘சிரித்தபடி’ ஜெயலலிதா உடலை வளைத்துக் கொண்டது. அங்கும் கூட நடராஜன் ஒரு ஓரமாகத்தான் உட்கார வைக்கப்பட்டார்.

என்னதான் தம்மை இயக்குபவராக நடராஜன் இருந்தாலும் அதை வெளிப்படையாக காட்டிக் கொள்வதை சசிகலா விரும்பவில்லையாம். இந்தநிலையில் நடராஜனை முன்னிலைப்படுத்தினால் மக்கள் ஆதரவு கிடைக்காது என உளவுத்துறை மூத்த அதிகாரிகள் சசிகலாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆகையால் நடராஜன் உள்பட அவருடைய குடும்பத்தினர் யாரையும் முன்னிலைப்படுத்த கூடாது என சசிகலா உத்தரவிட்டுள்ளார். இதனால் தான் ஜெய டிவி உட்பட மற்ற ஊடகங்கள் வி.கே.சசிகலா என முன்னிலைப்படுத்தியது. பின்னர் சின்னம்மா என சசிகலா மாற்றி அழைக்கப்பட்டார். நடராஜன் பெயர் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே பேனர் மற்றும் போஸ்டர்களில் சின்னம்மா என பெயர் போட்டு அடிக்குமாறு ஆதரவாளர்களுக்கு சசிகலா ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.