அம்பாந்தோட்டையில் சீனாவுக்கு 15ஆயிரம் ஏக்கர் நிலத்தினை 99 வருடங்களுக்கு குத்தகைக்கு வழங்கும் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அம்பாந்தோட்டை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சீன முதலீட்டாளர்களுக்கு நிலங்களை வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று பெருமளவான மக்கள் சித்ரகல சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் அம்பாந்தோட்டை நகரம் மற்றும் வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையால் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
அத்துடன் இரண்டு வாரங்களுக்கு முன்னர் நில அளவைத் திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரிகளும், மாவட்டச் செயலக அதிகாரிகளும் பேரகம என்ற இடத்திற்குச் சென்றவேளை பொது மக்களால் பலத்த எதிர்ப்பு வெளியிடப்பட்டது.
காலங்காலமாக நாம் வாழுகின்ற நிலத்தினை சீனர்களுக்கு விற்கப்போவதில்லையென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை சீனாவுக்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று எட்டாவது நாளாக துறைமுக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.