திரைப்படங்களை பார்க்க வரும் ரசிகர்களிடம் இருந்து எவ்வளவு தொகை நுழைவுக் கட்டணமாக வசூலிக்க வேண்டும் என்று தமிழக அரசு நிர்ணயம் செய்துள்ளது. நிர்ணயிக்கப்பட்ட இந்த கட்டணத்தை தான் ரசிகர்களிடம் திரையரங்கு உரிமையாளர்கள் வசூலிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் கடந்த 2012-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தேன்.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, புதிய திரைப்படங்கள் வெளியாகும் போது, ரசிகர்களிடம் இருந்து திரையரங்கு உரிமையாளர்கள் நிர்ணயிக்கப்பட்டதைவிட அதிகமாக கட்டணம் வசூலிக்கின்றனரா? என்பதை கண்காணிக்க அதிகாரிகளை கொண்ட சிறப்பு கண்காணிப்பு குழுவை அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
பொதுவாக பெரிய நடிகர்கள் நடித்த திரைப்படங்கள் வெளியான நாளில் இருந்து ஒரு வாரத்துக்கு அதிக தொகையை கட்டணமாக திரையரங்கு உரிமையாளர்கள் வசூலிக்கின்றனர். ஆனால், பெரிய நடிகர்கள் நடித்துள்ள திரைப்படங்கள் வெளியாகும் போதெல்லாம் அரசு விதிமுறைகளை பகிரங்கமாக மீறி அதிக கட்டணத்தை ரசிகர்களிடம் இருந்து திரையரங்கு உரிமையாளர்கள் வசூலிக்கின்றனர்.
இவ்வாறு அதிக கட்டணம் வசூலிப்பது அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும்.
கடந்த 2009-ம் ஆண்டு சினிமா தியேட்டர் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ், புதிய கட்டணத்தை நிர்ணயம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதில் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.10-க்கு டிக்கெட் வினியோகம் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், அவ்வாறு ரூ.10 மதிப்புள்ள டிக்கெட் புதிய திரைப்படங்கள் வெளியாகும்போது விற்கப்படுவதே இல்லை.
இந்தநிலையில், நடிகர் சூர்யா, நடிகைகள் சுருதிஹாசன், அனுஷ்கா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘சிங்கம் 3’ என்ற ‘எஸ்.3’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தை தயாரித்துள்ள ஞானவேல் ராஜாவும், தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்கு உரிமையாளர்களும், இந்த படத்தை பார்க்க வரும் ரசிகர்களிடம் அதிக தொகையை நுழைவு கட்டணமாக வசூலிக்க திட்டமிட்டுள்ளனர்.
இதை தடுத்து நிறுத்தும்படி, கடந்த நவம்பர் 23-ந் தேதி தமிழக தலைமை செயலாளர், சென்னை போலீஸ் கமிஷனர், அனைத்து மாவட்ட கலெக்டர்கள், நில அளவுத்துறை ஆணையர், வணிக வரித்துறை ஆணையர் ஆகியோருக்கு புகார் மனு கொடுத்துள்ளேன். இந்த புகாரை பெற்றுக் கொண்ட அதிகாரிகள், ஐகோர்ட்டு ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின்படி, திரையரங்கு உரிமையாளர்கள் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்த்தேன்.
ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையையும் அதிகாரிகள் எடுக்காமல் உள்ளனர். எனவே, சிங்கம் 3 என்ற எஸ். 3 படத்தை பார்க்க வரும் ரசிகர்களிடம் அதிக கட்டணத்தை வசூலிக்கும் தியேட்டர் உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி ராஜா முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மனுவுக்கு 21-ந் தேதிக்குள் பதிலளிக்கும்படி தமிழக தலைமை செயலாளர் உள்ளிட்டோருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.