ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட இலங்கை உயர்மட்டக் குழுவொன்று மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று வியாழக்கிழமை காலை மலேசியாவுக்கு பயணமாகியது.
ஜனாதிபதியின் இந்த விஜயம் காரணமாக மலேசியாவில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலதிகப் பொலிஸ் படையணிகள், நகரின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், சில தினங்களாகவே, நகரின் அனைத்துப் பகுதிகளிலும் புலனாய்வு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, விசேட மேற்பார்வை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மலேசியாவில் தங்கியிருக்கும் காலப்பகுதியில், இலங்கைக்கு எதிரான சில ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க, சில குழுவினர் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் காரணமாக, ஜனாதிபதியின் செயற்பாடுகள் பாதிக்கப்படப்போவதில்லை என மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சார் தெரிவித்துள்ளார்.
இன்று காலை 7.50 மணியளவில், கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்திலிருந்து, மலேசியா நோக்கிப் புறப்பட்ட ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர், சற்று முன்னர், கோலாலம்பூர் விமான நிலையத்தை அடைந்தனர் என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.