அலைஸ்டர் குக் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 டெஸ்ட் போட்டி தொடரில் இந்தியா 3 டெஸ்டில் வென்று ஏற்கனவே தொடரை கைப்பற்றி இருந்தது.
விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது டெஸ்டில் 246 ரன் வித்தியாசத்திலும், மொகாலியில் நடந்த 3-வது டெஸ்ட் 8 விக்கெட் வித்தியாசத்திலும், மும்பையில் நடைபெற்ற 4-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 36 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது. ராஜ்கோட்டில் நடந்த முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆனது.
இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நாளை (16-ந்தேதி) தொடங்குகிறது.
இந்நிலையில் கணுக்கால் மற்றும் தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 5-வது டெஸ்ட் போட்டியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு பதில் ஸ்டூவர்ட் பிராட் விளையாடுவார் எனத் தெரிகிறது.
தசைநார் காயம் காரணமாக கடந்த இரண்டு போட்டிகளில் விளையாடாமல் இருந்த ஸ்டூவர்ட் பிராட் தற்போது உடற்தகுதி பெற்றிருப்பதாக கேப்டன் அலைஸ்டர் குக் தெரிவித்தார். எனினும் இன்றைய பயிற்சிக்குப் பிறகு அவரது உடற்தகுதி குறித்து முடிவு செய்யப்படும் என்றும் குக் கூறினார்.
விராட் கோலியின் தொடர் சாதனை குறித்து ஆண்டர்சன் கடுமையாக விமர்சனம் செய்ததும், இதற்கு சர்வதேச வீரர்கள் கடும் கண்டனம் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.