வட மாகாணசபைக்கு மத்திய அரசினால் 2017ம் ஆண்டுக்கு வழங்கப்பட்டுள்ள மாகாணங்களுக்கான குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதி 2016ம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுடன் ஒப்பிடுகையில் 50 வீதம் குறைவாகும்.
இந்நிதியில் மாகாண சுகாதார அமைச்சுக்கு 410 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு கூடிய நிதி ஒதுக்கீடாக வழங்கப்பட்டுள்ளது.
மாகாணங்களுக்கான குறித்தொதுக்கப்பட்ட நன்கொடை நிதி 2016ம் ஆண்டுக்கு சுமார் 3199.30 மில்லிய ன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிதி 2017ம் ஆண்டுக்கு 1657.18 மில்லியன் ரூபாவாக வழங்கப்பட்டுள்ள நிலையில் கடந்த ஆண்டை விட 50 வீதம் 2017ம் ஆண்டுக்கான நிதி குறைவாகும்.
குறித்தொதுக்கப்பட்ட மாகாண நன்கொடை நிதி ஊடாக 2016ம் ஆண்டு முதலமைச்சரின் அமைச்சுக்கு 404.74 மில்லியன் ஒதுக்கப்பட்டிருந்தது.
இது 2017ம் ஆண்டுக்கு 284 மில்லியனாக குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல் விவசாய அமைச்சுக்கு 2016ல் 429.16 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருந்தது.
இது 2017ம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டில் 266 மில்லியன் ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் கல்வி அமைச்சுக்கு 2016ல் 1000 மில்லியன் ஒதுக்கப்பட்டிருந்தது.
அது 2017ம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டில் 285 மில்லியனாக குறைக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சுக்கு 2016ல் 932 மில்லியன் ஒதுக் கப்பட்டிருந்தது. அது 2017ம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டில் 410 மில்லியனாக குறைக்கப்பட்டுள்ளது. மீன்பிடி அமைச்சுக்கு 2016ல் 433.40 மில்லியன் ஒதுக்கப்பட்டிருந்தது.
2017ம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டில் 280 மில்லியனாக குறைக்கப்பட்டுள்ளது. 2017ம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டில் மாகாண சுகாதார அமைச்சுக்கு 410 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இது மற்றய அமைச்சுக்களை விட அதிகமாகும்.
பாரிய விழாக்களையும் தேவையற்ற செலவீனங்களையும் நிறுத்துங்கள் – வி.தவநாதன்
பாடசாலையில் வசதி கட்டணம் 60 ரூபா செலுத்த முடியாத நிலையில் வடமாகாணத்தில் பல பாடசாலை மாணவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
இந்நிலையில் பாரிய விழாக்கள் நடத்தப்படுவதையும், விழாக்களுக்கான தேவையற்ற செலவீனங்களையும் நிறுத்துங்கள். என கோரிக்கை விடுத்திருக்கின்றார்.
வடமாகாணசபையின் 2017ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட விவாதம் நேற்று(14) மாகாணசபை பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றிருந்தது. இதன்போதே தவநாதன் மேற்படி கோரிக்கையினை விடுத்திருக்கின்றார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
பாரியளவிலான விழாக்களைவும், விழாக்களுக்கான செலவுகளையும் நாங்கள் செய்து கொண்டிருக்கின்றோம்.
ஆனால் பாடசாலையில் வசதி கட்டணம் 60 ரூபாய் செலுத்த முடியாத நிலையில் பல பாடசாலை மாணவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
இந்நிலையில் நாங்கள் அநாவசியமான செலவுகளை தவிர்க்க வேண்டும். நிதியை மக்களுக்கு வழங்க வேண்டும். வட மாகாணம் பொருளாதார ரீதியாகத் தலை நிமிரும் வரையில் விழாக்கள் தேவையில்லை.
ஒரு விழாவுக்கு பல ஆயிரம் செலவிட்டு சகல உறுப்பினர்களுக்கும் அழைப்பிதழ் அடிக்கிறீர்கள்.
ஆனால் வருகின்ற உறுப்பினர்கள் ஒரு சிலரே பிறகு எதற்கு அநாவசிய செலவு? சிறிதாக ஒரு கடதாசியில் ஒரு கடிதத்தை அனுப்பலாம். மேலும் நாம் உணவு மற்றும் எமது வளங்களையும் நாங்கள் விரயம் செய்யாமல் பாதுகாக்க வேண்டும்.
மேலும் கட்டுப்பணம் செலுத்தி எங்களுடைய மக்கள் அதிகளவு நடுத்தர வாகனங்களை கொள்வனவு செய்கிறார்கள். அவை தொடர்பாகவும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை உண்டாக்கவேண்டும். மாகாணசபை உறுப்பினர் வி.தவநாதன் தெரிவித்துள்ளார்.
நீதி அமைச்சர் வெகு விரைவில் குப்பை தொட்டிக்குள் விழுவார் – எம்.கே.சிவாஜிலிங்கம்
வடமாகாணசபையின் தீர்மானத்தை குப்பை தொட்டிக்குள் போடுமாறு தெரிவித்த நீதி அமைச்சர் வெகு விரைவில் குப்பை தொட்டிக்குள் விழுவாரென வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் சுதந்திர கட்சியினர் தாக்க வரும்போது நாமே காப்பாற்றினோம்.
அன்று நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியினரின் தாக்குதலை காப்பாற்றியது தவறு.
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பலமிக்க அரசாங்கம் ஆட்சியில் இருந்த போது விஜயதாஸ ராஜபக்ஷ அரசாங்கத்துடன் முரண்பட்டுக்கொண்டு பலவீனமான எதிர்கட்சியாக இருந்த ஐக்கிய தேசிய கட்சிக்கு தாவினார்.
இதன் பின்னர் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதம் ஒன்றையடுத்து எழுந்த சர்ச்சையினை அடுத்து ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் விஜயதாஸ ராஜபக்ஷவை தாக்க முற்பட்டனர்.
இதனை நாம் தடுத்து நிறுத்தி காப்பாறினோம். இவ்வாறாக நாங்கள் செயற்பட்ட நிலையில் தற்போது வடக்கு தமிழ் மக்களின் ஆட்சியின் கீழ் உள்ள வட மாகாணசபையின் தீர்மானத்தை குப்பை தொட்டிக்குள் போடுமாறு கூறியுள்ளமை கவலைக்குரியது.
இவ்வாறு கூறியிருக்கும் அமைச்சர் குப்பை தொட்டிக்குள் விழும் நாள் வெகு தொலைவில் இல்லை.
இதேபோல் அன்று இக்கட்டான கால கட்டத்தில் இருந்த தற்போதைய ஆளூநர் றெஜினோல்ட் குரேவை வடக்கிற்கு கொண்டுவந்து பாதுகாத்து ஆயுத பயிற்சி வழங்கினோம்.
அவ்வாறு ஆயுத பயிற்சி வழங்கியவர் கள் வடமாகாணசபையில் தற்போதும் உள்ளனர்.
இவ்வாறு அன்று அவரை பாதுகாத்தது தற்போது தவறு என உணர்கின்றேன் என வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.