கல்வித்துறைக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வடக்கு மாகாண சபையின் 2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் (பட்ஜெட்) முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் நேற்று அவையில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அடுத்த ஆண்டுக்கான மொத்த ஒதுக்கீடான 22 ஆயிரத்து 728.117 மில்லியனில் கல்வி அமைச்சுக்கு மீண்டுவரும் செலவீனமாக 9 ஆயிரத்து 670.871 மில்லியனும், மூலதன செலவீனமாக 666.5 மில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண சபையின் 69 ஆவது அமர்வு நேற்றைய தினம் வடக்கு மாகாண சபை அவைத்தலை வர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. இதன்போதே வடக்கு மாகாண முதலமைச்சரும் வடக்கு மாகாண நிதி அமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் 20 17ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை சபையில் சமர்ப்பித்தார். கடந்த வருடத்தை பார்க்கையில் இம்முறை மொத்த ஒதுக்கீடு குறை வாக காணப்பட்ட போதிலும், பல்வேறு புதிய மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் இதில் உள்வாங்கப்பட்டுள்ளன. வீழ்ச்சியடைந்துள்ள வடக்கின் கல்வியை கட்டியெழுப்ப கல்வித்துறையில் பல புதிய திட்டங்களும், கல்விக்கு அடுத்த படியாக விவசாய கூட்டுறவு துறைக்கும் சுகாதார துறைக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. இதே போன்று மீன்பிடி, போக்குவரத்து வர்த்தக வாணிப அமைச்சும் புதிய பல திட்டங்களை கொண்டு வரவுள்ளது.
நேற்றைய தினம் வடக்கு மாகாண ஆளுநர் செயலகம், மாகாண பொதுச்சேவைகள் ஆணைக்குழு மற்றும் மாகாண பேரவை செயலகம் ஆகியவற்றுக்கான செலவீன தலைப்பு தொடர்பில் விவாதிக்கப்பட்டது. இதில் ஆளுநர் செயலகத்திற்கான 59 மில்லியன் மற்றும் 30.9 மில்லியன் ரூபாவும் மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுக்கான 28 மில்லியன் ரூபாயும், மாகாண பேரவை செயலகத்திற்கான 314.2 மில்லியன் ரூபாவுக்கான செலவீனங்களும் பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கின்றன.
மேலும் எதிர்வரும் இருபதாம் திகதி தொடக்கம் தொடர்ந்து இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள அமர்வில் முதலமைச்சர், அமைச்சுக்கள் மற்றும் பிரதம செயலாளர் செலவீனங்கள் தொடர்பிலான விடயங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அங்கீகாரம் வழங்கப்படவுள்ளது.
இதில் முதலமைச்சர் அமை ச்சிற்கு மீண்டுவரும் செலவீனமாக 2430. 611 மில்லியன், மூலதன செலவீனமாக 301.5 மில்லியனும், பிரதம செயலாளர் அலுவலகத்திற்கு மீண்டுவரும் செலவீனமாக 872. 78 மில்லியனும், மூலதன செலவீனமாக 393. 38 மில்லியனும், மாகாண விவசாய அமைச்சுக்கான மீண்டுவரும் செலவீனமாக 983. 784 மில்லியனும், மூலதன செலவீனமாக 289.5 மில்லியனும், மாகாண கல்வி அமைச்சுக்கு மீண்டுவரும் செலவீனமாக 9670. 871 மில்லியனும், மூலதன செலவீனமாக 666. 5 மில்லியனும், சுகாதார சுதேச மருத்துவ அமைச்சிற்கு மீண்டுவரும் செலவீனமாக 5267.45 மில்லியனும், மூலதன செலவீனமாக 786.5 மில்லியனும், மீன்பிடி போக்கு வரத்து வர்த்தக வாணிப அமைச்சிற்கு மீண்டுவரும் செலவீனமாக 420.726 மில்லியனும், மூலதன செலவீனமாக 293 மில்லியனும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவை எல்லாவற்றுக்குமான மொத்த ஒதுக்கீடு 22, 728.117 மில்லியனாகும்.
மேலும் 2016ஆம் ஆண்டுக்கான மூலதன செலவாக 8,818 மில்லியன் வழங்கப்பட்ட போதும் 2017ஆம் ஆண்டுக்கான மூலதன செலவீனமாக 5618 மில்லியன் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு ஆண்டு களுக்கும் இடையில் 3200 மில்லியன் ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது. இதேபோன்று 2016ஆம் ஆண்டுக்கான மீண்டுவரும் செலவீனமாக 16,174 மில்லியனும், 2017ஆம் ஆண்டுக்கான மீண்டுவரும் செலவீனமாக 16,476 மில்லியனும் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டை விட மீண்டு வரும் செலவீனத்திற்காக வழங்கப்பட்ட தொகை இம்முறை அதிகமாக காணப்பட்ட போதிலும் மூலதன செலவீனம் மற்றும் மீண்டுவரும் செலவீனங்களுக்காக வழங்கப்பட்ட தொகையின் ஒட்டுமொத்த அடிப்படையில் 2,898 மில்லியன் ஒட்டுமொத்தமாக குறைக்கப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டுக்கான வடக்கு மாகாண சபையுடன் தொடர்புடைய செலவில், மாகாண சபையூடான செலவு 22,728 மில்லியன் ரூபாயும், ஏனைய திணைக்களங்களுடனான செலவு 2,734 மில்லியன் ரூபாவும், மொத்தம் 25,462 மில்லியன் ரூபாவும் செலவிடப்படவுள்ளது.