இலங்கையில் பாலியல் தொழிலை சட்ட ரீதியாக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாலியல் தொழிலாளிகளின் உரிமைகளுக்கான மையத்தின் இணைத் தலைவியும் பாலியல் தொழிலாளியுமான பி.மகேஸ்வரி இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இன்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். அவர் தொடர்ந்தும் பேசுகையில்,
எமது தொழிலை சட்ட ரீதியாக அங்கீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அங்கீகரிப்பதனால் பாலுறவு சார் நோய்கள் குறிப்பாக எச்.ஐ.வீ போன்ற நோய்களை கட்டுப்படுத்த முடியும்.
பாலுறவு சார் நோய் கட்டுப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு, பாலியல் தொழிலை சட்ட ரீதியாக்குவதன் மூலம் தீர்வு காண முடியும்.
இலங்கையின் பாலியல் தொழிலாளிகள் தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுகின்றனர். ஏனென்றால் அந்த நாடுகளில் பாலியல் தொழில் சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு வெளிநாடுகளில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு திரும்பும் தொழிலாளிகளுக்கு பாலுறவு சார் நோய்கள் தொற்றியிருக்கக் கூடிய சாத்தியங்கள் அதிகம்.
எமது பிரச்சினைகளை கவனத்தில் கொள்ளாது எம்மை உதாசீனம் செய்வதனையே எல்லோரும் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
எம்மை பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி விளக்க மறியலில் இரண்டு வாரங்கள் தடுத்து வைத்தால் எமது பிள்ளைகளுக்கு யார் உணவு வழங்குவது?
இவ்வாறான சந்தர்ப்பங்களில் பெண் பிள்ளைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படக்கூடிய சாத்தியங்கள் அதிகமாக காணப்படுகின்றது. எமது தொழிலை சட்ட ரீதியாக அங்கீகரிப்பதனால் பல்வேறு நன்மைகள் ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
மகேஸ்வரி அடிக்கடி இந்தியாவிற்கு சென்று வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் சில பகுதிகளில் பாலியல் தொழில் சட்ட ரீதியானது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, பிராந்திய வலயத்தின் ஏனைய நாடுகளுடன் ஒப்பீடு செய்யும் போது எச்.ஐ.வீ நோய்த் தொற்று இலங்கையர்களுக்கு பரவும் வீதம் மிகவும் குறைவாக காணப்படுகின்றது என சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.