ஹம்பாந்தோட்டை சம்பவத்திற்கு ஜனாதிபதியே பொறுப்பாம்: மகிந்தவின் கண்டுபிடிப்பு!

ஹம்பாந்தோட்டை மாகம்புர துறைமுகத்தில் அண்மையில் இடம்பெற்ற சம்பவத்திற்கு ஜனாதிபதியே பொறுப்பு சொல்ல வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களை தெளிவூட்டும் நிகழ்வு ஒன்றில் நேற்று(15) பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்…

எனக்கு தெரிந்த வகையில் படைச் சேனாதிபதியின் உத்தரவு இன்றி கடற்படைத்தளபதி அநாகரீகமான முறையில் செயற்பட்டிருக்க வாய்ப்பில்லை.

தொழிற்சங்கப் போராட்டமொன்றை சீர்குலைப்பதற்கு படையினரை பயன்படுத்திய முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

சிலாவத்துறை பகுதியில் இரண்டு கடற்படையினர் பணயக் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்ட போது கூட ஹம்பாந்தோட்டையில் இதுப் போன்று நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

தற்போதைய கடற்படைத் தளபதி போர் இடம்பெற்ற காலத்தில் மிகச் சிறந்த முறையில் செயற்பட்டிருந்தார்.

மேலும் கடற்படையினர் மீது மக்கள் மத்தியில் காணப்படும் நன்மதிப்பினை சீர்குலைக்கும் நோக்கில் திட்டமிட்ட வகையில் சிலர் கடற்படையினரை தொழிற்சங்கப் போராட்டம் நடத்தப்படும் பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளனர். என அவர் தெரிவித்துள்ளார்.