ஐ.தே.க உறுப்பினர்களை கடுமையாக எச்சரிக்கிறார் முஸ்தபா!

ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களுக்கு உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினருமான பைசர் முஸ்தபா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகியிருக்கா விட்டால் இந்த அரசாங்கத்தை அமைத்திருக்க முடியாது என்பதனை ஐக்கிய சேதியக் கட்சியின் உறுப்பினர்கள் மறந்து விடக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையக் காரியாலயத்தில் நேற்று(15) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக் கொண்ட பொதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,

அரசாங்கத்திலிருந்து சுதந்திரக் கட்சியை வெளியேறுமாறு கோரும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் இந்த உண்மையை புரிந்து கொள்ள வேண்டும்.

அன்று மஹிந்த ராஜபக்சவை தோற்கடிப்பதற்கு எதிர்க்கட்சியில் மைத்திரியை தவிர வேறு பொருத்தமான எவரும் இருக்கவில்லை.

இதனால் சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரை ஜனாதிபதியாக்க நாட்டின் அனைத்து சக்திகளும் இணைந்து செயற்பட்டன. சுதந்திரக் கட்சியை அரசாங்கத்தை விட்டு வெளியேறுமாறு கோருவோருக்கு போதிய அனுபவம் கிடையாது.

மேலும் மைத்திரி மீது காணப்பட்ட நேசத்தினால் பொது வேட்பாளர் பதவி வழங்கப்படவில்லை மஹிந்தவை தோற்கடிக்க வேறும் பொருத்தமான ஒர் தலைவர் இல்லாமையினால் மைத்திரி பொது வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டார்.

அரசாங்கத்தில் எமக்கு தேவையானதை செய்ய முடியவில்லை. எனினும் நல்லாட்சி கொள்கைகளிலிருந்து அரசாங்கம் விலகிச் செல்ல இடமளிக்கப்படாது.

ஸ்ரீலங்கா சுத்திரக் கட்சி எந்தவொரு தனி நபரின் சொத்து கிடையாது அது கட்சியின் உறுப்பினர்களுக்கே சொந்தமானதாகும் என பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.