இலங்கையில் 5000 ரூபா நாணயத்தாள் தடை செய்யப்படாது!

இலங்கையில் 5000 ரூபா நாணயத் தாளை தடை செய்யும் நோக்கம் எதுவும் அரசாங்கத்திற்கு கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லையென நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

5000 ரூபா நாணய தாள் தொடர்பாக நான் பாராளுமன்றத்தில் அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பாக தவறான வகையில் ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டுள்ளன.

தேசிய பிரச்சினைகள் தொடர்பாக செய்திகள் வெளியிடும் போது ஊடகங்கள் கவனமாக செயற்பட வேண்டும்.

நான் 5000 ரூபா நாணய தாள் தடைசெய்யப்படும் என கூறியதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நான் எப்போது 5ஆயிரம் ரூபாவை தடைசெய்வேன் என கூறவில்லை.

5 ஆயிரம் ரூபா தாள் தொடர்பில் எதிர்ப்புகள் காணப்படுகிறது. அது தொடர்பில் பரிசீலனைக்கு உட்படுத்தப்படும் என்றே கூறியிருந்தேன்.

ஆனால் சில ஊடகங்கள் அந்தச் செய்தியை மாறுப்பட்ட கோணத்தில் கருத்துகளை விளங்கிக்கொள்ளும் வகையில் செய்தி வெளியிட்டுள்ளன. 5 ஆயிரம் ரூபா தாள் ஒருபோதும் தடைசெய்யப்படாது.

இது தொடர்பில் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.