சசிகலாவை முன்னிறுத்தினால் அ.தி.மு.கவுக்கு ஆபத்து!

அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட இருக்கிறார் சசிகலா. “பொதுச் செயலாளர் பதவிக்கு சசிகலாவை வரவிடாமல் தடுப்பதற்கான சட்டரீதியான வேலைகள் தொடங்கிவிட்டன. சசிகலா எதிர்ப்பாளர்களையும் சந்திக்க இருக்கிறார் அமித் ஷா” என்கின்றனர் பா.ஜ.க. நிர்வாகிகள்.

முதலமைச்சர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, கட்சியின் அடுத்த கட்டத் தலைமை குறித்த விவாதங்கள் ஆரம்பித்துவிட்டன. ‘மத்திய அரசு உள்ளே நுழையப் பார்க்கிறது. அ.தி.மு.கவை வழிநடத்த சசிகலாவின் தலைமை அவசியம்’ என சீனியர்கள் பேசி வருகின்றனர். அ.தி.மு.கவின் பொதுக்குழு கூடி புதிய தலைமையை தேர்வு செய்ய இருக்கிறது. இந்நிலையில், “ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, கட்சிக்கும் ஓ.பன்னீர்செல்வமே தலைமை ஏற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. பொதுச் செயலாளர் பதவிக்கு ஓ.பி.எஸ் முன்னிறுத்தப்படாவிட்டால், தம்பிதுரைக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படலாம் என்ற பேச்சு அடிபட்டது. ஆனால், சசிகலாவே முன்னிறுத்தப்படுவதை மத்தியில் ஆளும் பா.ஜ.க நிர்வாகிகள் ஏற்கவில்லை.

இதுகுறித்து பேட்டியளித்த ஆடிட்டர் குருமூர்த்தி, ‘சசிகலா பொதுச் செயலாளர் ஆனால், அ.தி.மு.க முற்றிலும் அழிந்து போய்விடும். அவருக்கு மக்களிடம் எதிர்ப்பு இருக்கிறது. நான்கரை ஆண்டுகாலம் ஆட்சி தொடர வேண்டும் என்றால், சசிகலா அல்லாத வேறு ஒருவர் அ.தி.மு.கவுக்குத் தலைமை தாங்கினால் மட்டுமே சாத்தியம்’ என விரிவாகப் பேசியிருக்கிறார்.

இதே மனநிலைதான் பா.ஜ.க தலைமையிடமும் நிலவுகிறது” என விவரித்த பா.ஜ.க நிர்வாகி ஒருவர், “தம்பிதுரையோ பன்னீர்செல்வமோ கட்சிப் பதவியில் இருந்தால், அடுத்து வரக் கூடிய தேர்தல்களில் விரும்பக் கூடிய கூட்டணியை உருவாக்க முடியும் என அமித் ஷா நம்புகிறார். தற்போது சசிகலாவுக்கு ஆதரவாக காங்கிரஸ் உள்பட சில கட்சிகள் செயல்படுவதை உன்னிப்பாக கவனித்து வருகிறார். எனவே, பொதுச் செயலாளர் பதவிக்கு சசிகலா வந்துவிடக் கூடாது என்பதற்காக சில முக்கியமான வேலைகள் தொடங்கியுள்ளன. சசிகலாவுக்கு எதிரான மனநிலையில் உள்ளவர்களை சந்தித்துப் பேசும் முடிவில் இருக்கிறார் அமித் ஷா” என்றார் விரிவாக.

“ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, மத்திய வர்த்தகத்துறை இணை அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை சந்திக்க இருக்கிறார். அவர் மூலம் அமித் ஷாவின் உதவியை நாட இருக்கிறார். அவருக்கு வேண்டிய உதவிகளை மறைமுகமாகச் செய்வதற்கும் மத்திய அரசு தயாராக இருக்கிறது. நாளை மாலை சசிகலா புஷ்பாவை சந்திக்கிறார் அமித் ஷா.

இதற்கான பின்னணி காரணம் என்னவென்றால், அ.தி.மு.கவின் தொண்டர் பலத்தை சிதறடிக்காமல், பா.ஜ.கவுக்கான வாய்ப்புகளாக மாற்றிக் கொள்வதுதான். இந்த சூழலில் காங்கிரஸ் கட்சி அ.தி.மு.க தலைமையோடு இணைந்து செயல்பட்டால், வரக் கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.கவால், வலுவான அணி அமைக்க முடியாமல் போகலாம் என எண்ணுகிறார் அமித் ஷா.

இதையடுத்துஇ அ.தி.மு.கவில் சசிகலா எதிர்ப்பாளர்கள் யார் என்பதைப் பட்டியலிட்டு, அவர்கள் மூலம் சட்டரீதியான சிக்கல்களை உருவாக்கும் வேலைகள் தொடங்கிவிட்டன. பொதுச் செயலாளர் பதவிக்கு சசிகலாவை போட்டியிடாமல் வைப்பதற்கான வேலைகள் தீவிரமடைந்துள்ளன. இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கும் ஏற்கப்பட்டுவிட்டது.

விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது. பொதுக்குழு கூடுவதற்குள் முடிந்த வரையில் சிக்கல்களை ஏற்படுத்தும் வேலைகள் நடந்து வருகின்றன. அதையொட்டியே, ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகளும் குரல் எழுப்புகின்றனர்” என்கிறார் அ.தி.மு.க நிர்வாகி ஒருவர்.

சட்டரீதியான சிக்கல்களைத் தாண்டி, அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்படுவாரா என்ற குரல்கள் அ.தி.மு.க வட்டாரத்தில் எழுந்துள்ளது.