இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. நான்கு போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் ஐந்தாவது போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரராக களம் இறங்கிய அலஸ்டைர் குக் 10 ரன்னில் ஆட்டம் இழந்தார். ஜடேஜா பந்தில் விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து அவர் அவுட் ஆனார்.
இதன் மூலம் இந்த ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 9 இன்னிங்சில் ஐந்து முறை ஜடேஜா பந்தில் ஆட்டம் இழந்துள்ளார் குக். ஆகவே, ஒரே தொடரில் ஐந்து முறை குக்கை அவுட்டாக்கி ஜடேஜா சாதனைப் படைத்துள்ளார்.
ராஜ்கோட்டில் நடைபெற்ற முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் 21 ரன்னில் குக்கை அவுட்டாக்கினார். விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்டின் 2-வது இன்னிங்சில் 54 ரன்னில் அவுட்டாக்கினார்.
மும்பையில் நடைபெற்ற டெஸ்டின் இரண்டு இன்னிங்சிலும் முறையே 46, 18 ரன்கள் எடுத்த நிலையில் குக்கை அவுட்டாக்கினார். தற்போது 10 ரன்னில் அவுட்டாக்கியதன் மூலம் ஐந்து முறை குக்கை அவுட்டாக்கிய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஜான்சன், தென்ஆப்பிரிக்காவின் மோர்னே மோர்கல், இந்தியாவின் இசாந்த் சர்மா, அஸ்வின், பாகிஸ்தானின் உமர் குல் மற்றும் ஆஸ்திரேலியாவின் ஸ்டூவர்ட் கிளார்க் ஆகியோர் நான்கு முறை குக்கை ஒரே தொடரில் வீழ்த்தியுள்ளனர்.