கருணாவுக்கு நீதிமன்றம் கொடுத்த தண்டனை!

முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் (கருணா) குண்டு துளைக்காத ஆடம்பர காரை, ஜனாதிபதி செயலகத்தில் ஒப்படைக்குமாறு கொழும்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆட்சியின் போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உபதலைவராக செயற்பட்ட கருணாவுக்கு 8 கோடி பெறுமதியிலான குண்டு துளைக்காத ஜுப் வண்டி வழங்கப்பட்டிருந்தது.

அந்த ஜீப் வண்டியை மீண்டும் ஜனாதிபதி செயலகத்தில் ஒப்படைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய இன்று உத்தரவிட்டுள்ளார்.

அதற்கமைய அந்த ஜுப் வண்டி எதிர்வரும் 19ஆம் திகதி பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினரிடம் இருந்து ஜனாதிபதி செயலக போக்குவரத்து இயக்குனரினால் பெற்றுக் கொள்ளப்படவுள்ளது.

இந்த வாகனத்தின் பெறுமதி 78,633,385 ரூபாய் என நீதிமன்றில் கூறப்பட்டுள்ள நிலையில் அந்த வாகனம் 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் திகதி ஹொங்கொங்கில் இருந்து ஜனாதிபதி செயலகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. குறித்த கார் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்கவினால் துறைமுகத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பொதுத் தேர்தலின் பின்னர் கருணாவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியேனும் கிடைக்காத நிலையில் அவர் இந்த வாகனத்தை மீண்டும் ஜனாதிபதி செயலகத்திடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.

எப்படியிருப்பினும் இந்த ஜுப் வண்டி வாகன பழுது பார்க்கும் இடத்தில் இருந்த கடந்த ஒக்டோபர் மாதம் 28ஆம் திகதி பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த வாகனத்தை முறைகேடாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கருணா கைது செய்யப்பட்டு. பிணையில் விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.