செவ்வாய் ஒருவர் ஜாதகத்தில் பலம்பெற்று அமைந்திருந்தால் நல்ல துணிவு, தைரியம், சிறப்பான உடலமைப்பு, நல்ல ரத்த ஓட்டம் உள்ளிட்ட அனைத்தும் நன்றாக அமையும். பெண்களின் வாழ்வில் முக்கியமான பங்கு வகிக்கும் செவ்வாய் ரத்த காரகனாகவும், களத்திர காரகனாகவும் செயல்படுகிறார்.
பூமிகாரகனாகவும் விளங்கும் செவ்வாய் ஆட்சி, உச்சம் பெற்று சந்திரன், குரு போன்ற கிரகங்களுக்கு கேந்திரத்தில் அமையப் பெற்றால் சொந்த பூமி, மனை வாங்கும் யோகம் உண்டாகும். புது வீடு கட்டும் வாய்ப்பு உருவாகும். பூமி, மனை போன்றவற்றால் முன்னேற்றம், லாபம் கிடைக்கும். பல வீடு, மனைகளுக்கு சொந்தக்காரராக வாழும் யோகம் உண்டாகும்.
செவ்வாய் தசா, புத்தி காலங்களில் பூமி, மனையால் சிறப்பான முன்னேற்றங்களை அடைய முடியும். செவ்வாய் சகோதர காரகனாகவும் விளங்குவதால், செவ்வாய் பலம் பெற்று அமைந்தவர்களுக்கு உடன் பிறந்த சகோதரர்களால் அற்புதமான அனுகூலங்கள் உண்டாகும்.
ஆனால் செவ்வாய் பலமிழந்து காணப்பட்டால் பெண்களுக்கு வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், மாதவிடாய் கோளாறுகள் போன்றவை ஏற்படும். இது மட்டுமின்றி பூமி, மனை வாங்குவதில் தடை, தாமதங்கள். சொத்துக்கள் இருந்தாலும் அனுபவிக்க தடையுண்டாகும். சொத்துக்களால் வீண் விரயமும் அதிகரிக்கும். தன் சொந்தப் பெயரில் சொத்துக்களை வாங்க முடியாது. அது போல உடன் பிறப்புகளும் ஆதரவாக இருக்க மாட்டார்கள். தேவையற்ற வம்பு, சண்டை, பிரச்சினைகள், அதனால் பிரிவு போன்றவை உடன் பிறந்த சகோதரர்கள் மற்றும் பங்காளிகளிடம் உண்டாகும்.
செவ்வாய்க்குரிய நட்சத்திரங்கள் மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகியவையாகும். செவ்வாய்க்குரிய எண்கள் 9, 18, 27 ஆகியவையாகும். இந்த எண்களில் பிறந்தவர்கள் மிகவும் துடிப்புடன், சுறுசுறுப்பாகக் காணப்படுவார்கள். முன்கோபம் உள்ளவர்களாக இருப்பார்கள். என்றாலும் மிகவும் திறமைசாலிகள் என்று உலகம் போற்றும்.