திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை முதல் ஒரு மாதம் சுப்ரபாதசேவை ரத்து செய்யப்படுகிறது. அதற்கு பதிலாக திருப்பாவை பாடல்கள் பாடப்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கார்த்திகை மாதம் முடிந்து, இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4.59 மணிக்கு மார்கழி மாதம் பிறந்தது. எனவே திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதிகாலை நேரத்தில் நடக்கும் சுப்ரபாத சேவை நாளையில் (சனிக்கிழமை) இருந்து அடுத்த மாதம் (ஜனவரி) 14-ந்தேதி வரை ஒரு மாதத்துக்கு ரத்து செய்யப்படுகிறது.
அதற்கு பதிலாக, மேற்கண்ட நாட்களில் திருப்பாவை தினமும் ஒரு பாடல் பாடப்படுகிறது. கோவிலில் பெரியஜீயர் சுவாமிகள், சின்னஜீயர் சுவாமிகள் மற்றும் சீடர்கள் திருப்பாவை பாடல்களை பாடுகிறார்கள். ஏழுமலையான் கோவிலில் போக சீனிவாசமூர்த்தி உள்ளார். அவருக்கு அருகில் ஸ்ரீகிருஷ்ணர்சாமியை வைத்து திருப்பாவை பாடப்படுகிறது. அதேபோல், திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்குச் சொந்தமான அனைத்து வைணவ கோவில்களிலும் திருப்பாவை பாடல்கள் பாடப்படுகிறது.