பொருளாதாரமின்மை, அயல் நாட்டு மோகம், குடும்ப வறுமை, மேற்படிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் இந்தியர்கள் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் குடி பெயர்ந்து வருகின்றனர்.
குறிப்பாக அமெரிக்கா, லண்டன், துபாய், ரஷியா, சவூதி அரேபியா போன்ற நாடுகளுக்கு செல்ல இந்தியர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். பெரும்பாலும் வெளிநாடுகளுக்கு செல்பவர்களில் பலர் அங்கேயே குடியேறி விடுகின்றனர்.
இதனால் கிட்டத்தட்ட உலகின் எல்லா நாடுகளிலும் இந்தியர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் உலகம் முழுவதுமிருந்து பிற நாடுகளுக்கு குடியேறியவர்கள் பட்டியலில் இந்தியர்கள் முதலிடம் வகிப்பதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரிய வந்துள்ளது.
வெளிநாடுகளில் குடியேறுபவர்கள் குறித்து பியூ ஆய்வு மையம் ஆய்வு மேற்கொண்டு பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், அதிகபட்சமாக 15.6 மில்லியன் மக்களுடன் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. 12.3 மில்லியன் மக்களுடன் மெக்சிகோ 2-வது இடத்தையும், 10.6 மில்லியன் மக்களுடன் ரஷியா 3-வது இடத்தையும் பிடித்துள்ளது.
9.5 மில்லியன் மக்களுடன் சீனா 4-வது இடத்தையும், 7.2 மில்லியன் மக்களுடன் பங்களாதேஷ் 5-வது இடத்தையும் பிடித்துள்ளது. உலகம் முழுவதும் சுமார் 244 மில்லியன் பேர், சொந்த நாட்டில் இருந்து குடிபெயர்ந்து வெவ்வேறு நாடுகளில் வசித்து வருகின்றனர். இது உலக மக்கள் தொகையில் 3.3 சதவீதம் என்று இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக அமெரிக்காவில் 46.6 மில்லியன் வெளிநாட்டினர் வசித்து வருகின்றனர். இப்பட்டியலில் 12 மில்லியன் மக்களுடன் ஜெர்மனி 2-வது இடத்தையும், 11.6 மில்லியன் மக்களுடன் ரஷியா 3-வது இடத்தையும் பிடித்துள்ளது.