பிரபல மலையாள நடிகை தன்யா மேரி வர்கீஸ். தலப்பாவு, கேரளா கபே, நாயகன், ரெட் சில்லீஸ், பிரணாயம் உள்ளிட்ட பல்வேறு மலையாள படங்களில் நடித்துள்ள அவர், திருடி, வீரமும் ஈரமும் ஆகிய தமிழ் படங்களில் நாயகியாக நடித்துள்ளார். இது தவிர விளம்பர படங்களிலும் நடித்து உள்ளார்.
இவர் கடந்த 2012–ம் ஆண்டு ஜனவரி மாதம் ஜான் ஜேக்கப் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஜான் ஜேக்கப்பின் குடும்பத்தினர் திருவனந்தபுரத்தில் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார்கள். அந்த நிறுவனத்தில் நடிகை தன்யா இயக்குனராக உள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தின் பல இடங்களில் ஜான் ஜேக்கப்பின் கட்டுமான நிறுவனம் சார்பில் கடந்த 2011–ம் ஆண்டு அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் தனி வீடுகள் கட்டும் பணி தொடங்கியது.
இதில் 20 தனி வீடுகள் மற்றும் 500 அடுக்குமாடி குடியிருப்புகள் விற்பனை செய்ய இருப்பதாகவும், அவற்றை 2 ஆண்டுகளில் ஒப்படைப்பதாகவும் கூறி பலரிடம் ரூ.100 கோடி வசூல் செய்தனர். மேலும் கேரளா மற்றும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களிடம் அதிக வட்டி தருவதாகக் கூறி ரூ.30 கோடி பணத்தையும் கட்டுமான நிறுவனத்தினர் வாங்கி உள்ளனர். ஆனால் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் குடியிருப்பையும், பணத்தையும் வழங்கவில்லை. பணம் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்ததால் நடிகை தன்யா மற்றும் கணவர் குடும்பத்தினர் தலைமறைவாகி விட்டனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் செய்தனர். இதனையடுத்து தலைமறைவான நடிகை தன்யா அவரது கணவர் ஜான் ஜேக்கப் மற்றும் கணவரின் தம்பி சாமுவேல் ஜேக்கப் ஆகியோரை பிடிக்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பெங்களூரு, மும்பை மற்றும் கேரளாவில் சில ஊர்களில் சோதனை நடத்தினர். இந்நிலையில் நடிகை தன்யா உள்ளிட்ட 3 பேரையும் தனிப்படை போலீசார் இன்று கைது செய்தனர்.
இதேபோல் தன்யாவின் மாமனார் ஜேக்கப் ஜான்சனை ஏற்கனவை கைது செய்திருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.